தமிழ்நாடு அரசு அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்தது ஒன்றிய அரசு

Viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜன.24 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா, குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு நேற்று (23.1.2025) அறிவித்தது.
ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம், கடந்த ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 எக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.
இந்த ஏலத்தில், வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.
கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தம் 2023-இன்படி இந்த ஏலம் நடத்தப்பட்டதாக, ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சகம் கூறியது.

எதிர்ப்பு
“டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், பல்லுயிர் பெருக்க மண்டலமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி முழுமையாக அழிந்துவிடும்” எனக் கூறி, இதற்கு சூழலி யல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டது. அதில், “தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தீர்மானம்
ஒன்றிய சுரங்கத்துறையின் அறிவிப்புக்கு எதிராக மதுரையில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், ‘டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதியளிக்கவில்லை’ என, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை; அனுமதியும் வழங்கப்படவில்லை’ எனக் கூறியது.இதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் 09ஆம் தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

வலியுறுத்தல்
அந்த தீர்மானத்தில், ‘இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி ஒன்றிய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது” என தெரிவிக்கப்பட்டது.
டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டது.
“இப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை
தீர்மானத்துக்கு முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” என்றார்.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் முதல் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள், விவசாயிகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.

ரத்து
இந்நிலையில், நேற்று 23.1.2025) அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிட்டாப்பட்டியில் கொண்டாட்டம்
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்ததை அடுத்து, மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *