புதுடில்லி, ஜன.23 பிப்ரவரி 4ஆம் தேதியில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் விசாரணையில் இறுதி விசாரணை நடத்தப்படுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது. ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு செய்வதாக கூடுதல் மனுவை தாக்கல் செய்த அவர்கள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதிகள் கேள்வி
அதை கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்திலும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திலும் கடந்த ஆண்டு நிலையே தொடர்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ஆளுநர் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதே நிலையே தொடர்கிறது என்றும் தெரிவித்தனர்.
அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்குரைஞர், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநர் விவகாரத்தில் பழைய நிலைதான் தொடருகிறதா? முடிவு எட்டப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை ஒருவாரத்துக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண வேண்டும். அப்படி தீர்வு ஏற்படாத நிலையில் நாங்களே இந்த பிரச்சனைக்கு தீர்வை முன்வைப்போம் என தெரிவித்தனர்.
இறுதி விசாரணை
இந்த நிலையில் உச்சநீதி மன்றத்தில் நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக தமிழ்நாடு அரசின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகள் நேற்று (22.1.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வரும் 4-ஆம் தேதி இறுதி விசாரணை நடந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.