சென்னை, ஜன. 23- வரலாற்றை ஆதார பூா்வமாக நிரூபிக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்
சென்னை அய்அய்டி ஆவணக் காப்பகம் மற்றும் பாரம்பரிய மய்யம் சார்பில் ‘தெற்கு ஆசியா மற்றும் நிறுவனங்களுக்கான வரலாற்று இணைப்புகள்’ எனும் தலைப்பிலான கண்காட்சியை தொடங்கி வைத்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியது:
பாரம்பரிய மிக்க கல்வி நிறுவனங்கள் நாட்டின் கலாச்சார அடையாளங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு சமூகமும், தனக்கான வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்வது அவசியம். அய்ரோப்பிய நாடுகள் பல நூறு ஆண்டுகளாக தனக்கான சிறந்த வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்துள்ளன.
ஆதாரங்கள் தேவை
அதேநேரத்தில், தமிழ் சமூகம் இலக்கியத்தில் சிறந்து விளங்கினாலும், வரலாற்று ஆவணங்களைக் குறைவாகவே கொண்டுள்ளது. இலக்கியங்களில் தமிழ் மொழி 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அறிவியல்பூா்வமாக நிரூபிப் பதற்கான ஆதாரங்கள் இல்லை. வரலாற்றை ஆதாரபூா்வமாகக் கண்டறிவதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.
தற்போது கீழடியில் ஒவ்வொரு அடுக்கு தோண்டும்போதும், 100 முதல் 200 ஆண்டுகள் இடைவெளியில் பயன் படுத்திய பொருள்கள் கிடைக்கின்றன. இதன்மூலம் அங்கு வசித்த மக்களின் வரலாறு தெரியவருகிறது என்றார் அவா்.
சென்னை அய்அய்டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பொதுமக்கள் அடுத்த இரு மாதங்களுக்கு காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமெரிக்க எம்அய்டி கல்வி நிறுவன (தெற்கு) தலைவா் ரேணு போபண்ணா, பொறியியல் துறை தலைவா் ஹம்சா பாலகிருஷ்ணன், சென்னை அய்அய்டி உலகளாவிய ஈடுபாட்டுத் துறை தலைவா் ரகுநாதன் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.