கவிஞர் கலி.பூங்குன்றன்
டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பல சமயத்தவர்களை அழைக்கும் பாரம்பரியமான நிகழ்வின்போது, கிறித்தவ, இஸ்லாமிய, யூத மற்றும் நாத்திக அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஹிந்து சாமியார்களுக்கும், இஸ்கான் அமைப்பினருக்கும், அமெரிக்காவில் உள்ள ஆரிய சமாஜத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்தியாவில் பி.ஜே.பி. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஹிந்து மதவாத அரசியல் கண்மூடித்தனமாகக் கோலோச்சியது.
கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல்…
எதிலும் மதவாதப் பார்வை என்ற கண்ணோட்டம் இருந்தது. குறிப்பாக இஸ்லாமியர்கள்மீதும், கிறித்த வர்கள்மீதும், அவர்களின் வழிபாடு, கலாச்சாரத்தின்மீதும் அதிகாரப் பலத்துடன் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண் சங் பரிவார்களால் கூட்டுப் பாலியல் கொடூரம் நடந்தது. அந்தப் பெண்ணின் பால்மணம் மாறாப் பாலகன் தாயின் கண் எதிரிலேயே அடித்துக் கொல்லப்பட்டதெல்லாம் எத்துணைப் பயங்கரம்!
இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மைவாதிகளும், சமூகநீதியாளர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றங்களுக்கும் சென்றனர். நீதிமன்றம் தண்டனை கொடுத்த நிலையிலும், ‘நல்லெண்ண அடிப்படை’ என்று கதையளந்து, தண்டனையின் முழு காலத்தையும் அனுபவிக்கவிடாமல், இடையிலேயே விடுதலை செய்தது பாசிச பா.ஜ.க. அரசு.போதும் போதாததற்குக் குடியுரிமைச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, காலம் காலமாக இந்தியா வில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களை வெளியேற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.
கொடுமையைக் கண்டு கொதித்தார்கள்
இவற்றை எல்லாம் அறிந்த வெளிநாடுகளில் வாழும் வேற்று மதத்தவர்கள் இந்தியாவில் தங்கள் மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைக் கண்டு கொதித்தார்கள்; நீறுபூத்த நெருப்பாக இருந்தது.
இப்பொழுது அமெரிக்காவில் குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் அதன் விளைவு வெடித்தது. பதவியேற்பு விழாவில் கிறித்தவ, இஸ்லாமிய, யூத மற்றும் நாத்திக அமைப்பின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து, ஹிந்து அமைப்பினருக்குக் கரியைப் பூசிவிட்டனர்.
உலக அளவில் ஹிந்து மதம் வெறுக்கத்தக்கதாக ஆகிவிட்டது
உலக அளவில் பி.ஜே.பி. அரசின் காரணமாக, சங் பரிவார்களின் வன்முறை காரணமாக இந்தியா வின் பெரும்பான்மை மதமான ஹிந்து மதம் வெறுக்கத்தக்கதாக ஆகிவிட்டது. அதன் யதார்த்தத்தை அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் காண முடிகிறது.
நாத்திகர்களுக்கு இடம், ஹிந்துக்களுக்குப் புறக்கணிப்பு – உலக நாடுகளின் மத்தியில் இந்தியா வின் தலைக்குனிவு இதுதான்!