பெண்கள் பயன்படுத்துவதில் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படும் பல பொருட்களில் சானிட்டரி நாப்கின்களும் ஒன்று. தற்போது சந்தைகளில் பல விதமான நாப்கின்கள் விற்கப்படுகின்றன. அவை இயற்கை பொருட்களை கொண்டும், ரசாயனப் பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எப்படி தயாரிக்கப் பட்டாலும், சில நாப்கின்களால் பெண்கள் அலர்ஜி மற்றும் அசவுகரியத்தால் அவதிப்படுகிறார்கள். இதைப் புரிந்து கொண்டு பலர் இயற்கை முறையில் நாப்கின் களை தயாரித்து வருகிறார்கள்.
ஆனால் அவற்றிலும் சில ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஒரு சிலர் இதனை அப்படியே தூக்கி எறிவதால் மண்ணிற்கு பாதுகாப்பற்றது என்று நினைத்து எரித்து விடுகிறார்கள். அவ்வாறு எரிப்பதாலும் அதில் இருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் நச்சு, நாம் சுவாசிக்கும் காற்றின் தன்மையை மாசடைய செய்கிறது. புதைத்தாலும், எளிதில் மக்குவதில்லை. பல மாதங்கள் ஆனாலும் அப்படியே தான் இருக்கிறது. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகில் முதன் முதலில் மக்கும் தன்மையுடைய நாப்கின்களை முழுவதும் இயற்கையான முறையில் தயாரித்துள்ளார் சென்னையை சேர்ந்த டாக்டர் ப்ரீத்தி ராமதாஸ்.
பயோ பாலிமெர்ஸ்ஸில் அனுபவம் வாய்ந்த ப்ரீத்தி, நாப்கின்களில் பயன்படுத்தி இருக்கும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் தயாரிக்கும் முறைப் பற்றி விவரித்தார். ‘‘பயோ பாலிமெர்ஸ்ஸில் இருக்கும் அனுபவத்தை பயன்படுத்தி மக்களுக்கு பயன்படக்கூடிய ஏதாவது ஒரு பொருளை உருவாக்க வேண்டும்னு விரும்பினேன். ஆண்டாண்டு காலமாக பெண்கள் இடையே நிலவும் மிகப் பெரிய பிரச்சினை மாதவிடாய் காலத்தில் அவர்கள் பயன்படுத்தப்படும் வழிமுறைகள். நம் முடைய அம்மாக்கள் காலத்தில் பெண்கள் துணிகளை மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள்.
அதனை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் துணி என்பதால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்படும். இதற்கு ஒரு தீர்வு அளிக்கத்தான் நாப்கின்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது பல விதமான ரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால், எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று விரும்பினேன்.
‘‘நான் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட் களைக் கொண்டு தான் நாப்கினை வடிவமைத்து இருக்கேன். கரும்பு நார்கள் தான் என் நாப்கினுடைய முக்கிய மூலப் பொருள். இந்த நாப்கின் மூன்று அடுக்குகள் கொண்டது. முதல் மற்றும் மூன்றாவது அடுக்குகளில் மஞ்சள், வேப்பிலை, வெட்டி வேர் போன்ற பொருட்களும். இவ்விரண்டுக்கும் இடையே கரும்பின் நார்களை கொண்டு செய்தேன்.
எலுமிச்சை ரத்தக்கசிவினால் ஏற்படும் துர் நாற்றத்தை போக்கும். இதனை ஸ்மால் மற்றும் லார்ஜ் என இரண்டு சைஸ்களில் அமைத்திருக்கிறேன். ஸ்மால் 4 முதல் 5 மணி நேரம் வரை தாங்கும். லார்ஜ் சைசினை ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். என்னதான் என்னுடைய பொருள் பயோடீகிரேடபில் என்று நான் சொன்னாலும், அதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்பதால், நான் தயாரித்த அந்த நாப்கினை நானே எங்க வீட்டின் தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்தேன்.
அதே போல் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற நாப்கின் ஒன்றையும் அருகில் புதைத்தேன். 15 நாட்கள் கழித்து இரண்டு நாப்கின்களும் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, நான் தயாரித்த அந்த நாப்கின் மண்ணோடு மண்ணாகி இருந்தது. கடையில் விற்பனையில் இருக்கும் நாப்கின் அப்படியே இருந்தது.
மேலும் என் நாப்கின் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள மண்ணை பரிசோதித்த போது அதன் நைட்ரஜன் அளவு அதிகமாக காணப்பட்டது. என்னோட ஆய்வ கத்திலே நான் இந்த நாப்கின்களை தயாரித்து வருகிறேன். இங்கு பெரிய நிறுவனங்களில் இருப்பது போல் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் கிடையாது. என்னிடம் இருக்கும் இயந்திரங்கள் கொண்டு தான் நான் தயாரித்து வருகிறேன்.
அதனால் ஒரு நாப்கின் தயாரிக்கவே குறைந்த பட்சம் மூன்று நாட்கள் தேவைப்படும். அதனால் கேட்பவர்களுக்கு மட்டும் அவ்வப்போது தயாரித்து வழங்கி வருகிறேன். இதனை பெரிய அளவில் தயாரிக்க முதலீட்டாளர்கள் தேவை. அதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்கிறார் பிரீத்தி.