கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நமது போராட்டம் ஓயாது!

Viduthalai
9 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

காரைக்குடி, ஜன.22 கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நமது போராட்டம் ஓயாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.1.2025) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் உருவச்சிலை திறப்பு விழாவில் ஆற்றிய உரை வருமாறு:
ஒளி மிகுந்த முகங்களோடு அமர்ந்த நீங்கள், இப்போது பசி மிகுந்த முகங்களோடு அமர்ந்திருக்கும் நிலையில், உங்கள் முகங்கள் மட்டுமல்ல, எங்கள் முகங்களையும் சேர்த்துதான் நான் சொல்கிறேன். ஆகவே, நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல் சுருக்கமாக என்னுடைய உரையை நான் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய மகிழ்ச்சி இரண்டு மடங்காகிறது!

தமிழ்நாடு
வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளல் அழகப்பர் பெயரிலான பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் திறப்பு விழா ஆகிய அறிவுசார் விழாக்களில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய மகிழ்ச்சி இரண்டு மடங்காகிறது!
வழக்குரைஞர் – தொழிலதிபர் என்ற அடையாளங்களைக் கடந்து, வள்ளல் அழகப்பர் அவர்கள், ஒரு பெருமைக்குக் கார ணமாக வாழ்ந்திருக்கிறார். கல்விக்காக அவர் செய்திருக்கும் தொண்டுதான் மிகமிக முக்கியமான தொண்டாக அமைந்தி ருக்கிறது! இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள், வள்ளல் அழகப்பர் அவர்களை குறிப்பிட்டு சொல்லும்போது, சோசலிச முதலாளி என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்!

உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர்!

தமிழ்நாடு
இந்தியா விடுதலை அடைந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த லட்சுமணசாமி முதலியார் அவர்கள், “அறியாமையிலிருந்து மக்கள் விடுதலை அடையவேண்டும் என்றால், பின்தங்கிய பகுதிகளில் செல்வந்தர்கள் கல்லூரிகளைத் தொடங்கவேண்டும்”-என்று கோரிக்கை வைத்தார். உடனே அந்த மேடையில் இருந்த வள்ளல் அழகப்பர் அவர்கள், ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து, நான் தொடங்கத் தயார் என்று உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரராக அன்று அவர் எடுத்துக்காட்டினார்.
கல்வித் தொண்டையும் தமிழ்த்தொண்டையும் சேர்த்து ஆற்றிய அவரால்தான், இன்றைக்குப் பலரும் பட்டங்கள் பெற்று, உலகம் முழுவதும் உயர்ந்து இருக்கிறார்கள். சுருக்க மாக சொல்லவேண்டும் என்றால், தமிழரின் ஈகை பண்புக்கு அடையாளமாக வாழ்ந்தவர்தான் வள்ளல் அழகப்பர் அவர்கள்! அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வள்ளல் அழகப்பரின் பெயரில் அமைந்திருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்ததில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

வள்ளுவர் நெறியே வாழ்வியல் நெறியாக மாறவேண்டும்

வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் தலைவர் கலைஞர் அவர்கள் சிலையை அமைத்த பேரறிவுச் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், இந்தச் சிலையைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவர் நெறியே வாழ்வியல் நெறியாக மாறவேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்! குறள் நெறி பின்பற்றப்பட்டால்தான், தமிழ்நாடும் காப்பாற்றப்படும்; உலகமும் காப்பாற்றப்படும்! அப்படி காப்பாற்றப்படவேண்டும் என்றால், வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழ் மண்ணில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை களவாட ஒரு கூட்டமே இன்றைக்கு சதி செய்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ்வொரு தமிழரும் இருக்கவேண்டும்!

அடுத்து, திராவிட இயக்கத்தின் வீறுமிக்க கவிஞர் பாரதி தாசன் பரம்பரைக் கவிஞர், கவியரசு முடியரசனார் அவரு டைய பெயரை இந்த அரங்கத்திற்கு உங்கள் முன்னால் நாம் சூட்டியிருக்கிறோம். ‘திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுக் கவிஞர்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர் முடி யரசன் அவர்கள். தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கு நெருக்க மான கவிதைத் தோழர் அவர். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணித் தலை வராக செயல்பட்டு கன்னித்தமிழ் வளர்த்தவர்! அவரது பெயரை சூட்டியதற்கு நான் உள்ளபடியே பெருமைப்படு கிறேன்.

என்னுடைய இதயமார்ந்த நன்றி!

அடுத்து, ‘அறிவுதான் நம்மைக் காக்கும் கருவி’-என்று வள்ளுவர் கூறியதற்கு அடையாளமாக, நம்முடைய மரியா தைக்குரிய மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், தன்னுடைய அன்னையார் திருமதி லக்ஷ்மி அவர்களது பெயரால், வளர்தமிழ் நூலகத்தை அமைத்திருக்கிறார். இப்படி, அறிவாலயங்களாக திகழும் நூலகங்களைத் திறந்து வைக்கும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருப்பதில் உள்ளபடியே அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அதற்காக நான் நம்முடைய ப.சிதம்பரம் அவர்களுக்கு என்னுடைய இதயமார்ந்த நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மரியாதைக்குரிய ப.சிதம்பரம் அவர்களைப் பொறுத்த வரைக்கும், அவரே ஒரு நடமாடும் நூலகம்தான்! அரசி யல், வரலாறு, சட்டம், பொருளாதாரம், இலக்கியம் என்று எல்லா துறையிலும் ஆழமான அறிவு கொண்ட, அறிவுக் கருவூலம்தான் ப.சிதம்பரம் அவர்கள். நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திட்டம் குறித்தும், நம்முடைய ப.சிதம்பரம் அவர்கள் என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்வதில் நான் ஆர்வமாக இருப்பேன். ஏன் என்றால், அவரின் பார்வையும், அவரின் பாராட்டும் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும்!
ப.சிதம்பரம் அவர்கள் ஏற்படுத்தி தந்திருக்கும் இந்தத் தருணத்தில், இங்கு இருப்பவர்களுக்கும் – இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் இணையம் வழி யாக பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். கொடையுள்ளமும், அறிவுத் தாகமும் கொண்டவர்கள், தங்களின் ஊர்களில் இது போன்ற நூலகத்தை உருவாக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்நூலகத்திற்கு முதற்கட்டமாக 1000 நூல்களை அனுப்பவுள்ளேன்!

பெரிய நூலகங்களை அமைக்க முடியாதவர்கள், வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களால் முடிந்த அளவில் படிப்பகங்களையாவது தொடங்கி நடத்தவேண்டும். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றபிறகு, எனக்கு யாரும் சால்வையோ, கைத்தறி ஆடைகளோ அணிவிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, புத்தகங்களை வழங்குங்கள், நூல்களை வழங்குங்கள், அதை மற்ற நூலகங்களுக்கு நான் அனுப்பி வைத்து, அது பயன்படக்கூடிய வகையில் அமையும் என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அந்த அடிப்ப டையில் இதுவரை 2 இலட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள் என் கைக்கு வந்திருக்கிறது. அவற்றையெல்லாம் பல்வேறு நூலகங்களுக்கு நான் அனுப்பி வைத்திருக்கிறேன். நூலகத்தைச் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தபோது அண்ணன் ப.சிதம்பரம் அவர்களிடத்தில் நான் சொன்னேன். இந்த நூல் நிலையத்திற்கு நானும் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன்.

அப்படியா மகிழ்ச்சி அனுப்புங்கள் என்று சொன்னார். அந்தக் கோரிக்கையை அவரும் எடுத்து வைத்திருக்கிறார். எனவே, சென்னைக்கு சென்றவுடன் முதல் வேலையாக இங்கு அமைந்திருக்கும் நூலகத்திற்கு முதற்கட்டமாக 1000 நூல்களை அனுப்பவுள்ளேன். நான் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைப்பது என்பது வேறு. அரசின் மூலமாக என்ன செய்ய வேண்டுமோ, அதையும் நான் உறுதியாக செய்வேன் என்று இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எதிர்காலத் தலைமுறையினர் கல்வியைக் கடந்து, சமூகத்தை வரலாற்றை அறிந்துகொள்ள முற்போக்குச் சிந்தனைகள் வலுப்பெற இத்தகைய நூலகங்களும் படிப்பகங்களும்தான் அடித்தளமாக அமையும்! அந்த அடித்தளத்தில் உருவாகும் இளைஞர்கள்தான் நம்முடைய தமிழ்ச்சமுதாயத்தை நல்வழியில் வழிநடத்துவார்கள்!

தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்தும்!
தமிழ்நாட்டை வளப்படுத்தும்!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் அமையவுள்ள தந்தை பெரியார் நூலகம் – திருச்சியில் அமையவுள்ள நூலகம் போன்றவை தமிழ்நாட்டுக்கு அடையாளமாக பெருமையாக விளங்குவதுபோல், நீங்கள் அமைக்கும் நூலகங்களும், படிப்பகங்களும் உங்கள் ஊருக்கு அடை யாளமாக பெருமையாக அமையும்! தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்தும்! தமிழ்நாட்டை வளப்படுத்தும்! தமிழ்நாட்டு மாணவ, மாணவியர், இளைஞர்களை அனைத்துத் துறைக்கும் தகுதிப்படுத்தும்!
நான் மாணவர்களை சந்திக்கும்போதெல்லாம் மறக்காமல் சொல்வது, கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! என்று அடிக்கடி எடுத்துச்சொல்வது உண்டு. எனவே, நம்முடைய இளைஞர்கள் அறிவுச் செல்வத்தை சேர்க்கப் பாடுபடுங்கள்… பொருட்செல்வம் நிச்சயம் உங்களைத் தேடி வரும்! அதனால்தான், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்தபிறகு, கல்விக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் குடும்ப நிதி ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘‘திருமதி லஷ்மி வளர் தமிழ் நூலக’’த்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் ப.சிதம்பரம், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் க.ரவி ஆகியோர் உள்ளனர் (21.1.2025).

இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு!

கல்விக்கான நம்முடைய பணிகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கி யிருக்கிறோம்.
அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ். போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதனிலை தேர்வுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாயும், மெயின்ஸ் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயும் வழங்குகிறோம்!
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, அய்.அய்.டி, என்.அய்.டி, போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களில் இளநிலை கல்வி பயில சேர்க்கை பெற்ற வர்களுக்கு முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
‘நான் முதல்வன் திட்டம்’ மூலமாக 22 இலட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்து, பெரு நிறுவனங்களில் பணிபுரிய அவர்களை தகுதிப்படுத்தி வருகிறோம்.
‘புதுமைப்பெண்’ திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாண வியர்களின் எண்ணிக்கை 34 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தால் மாணவர்களின் உயர்கல்வி ஆர்வம் அதிகம் ஆகியிருக்கிறது.

கல்விக் கட்டணச் சலுகைக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!

முதல் தலைமுறையாக கல்லூரி வரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
150 ரூபாய் கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், முதல மைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் ‘உங்களைத் தேடி உயர்கல்வி’ – இப்படி என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியும்!

100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு!
இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வித் தரமும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான், இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக, அய்ந்நூற்றுக்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக, அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக, புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை யில் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது.
இப்படி உயர்கல்வியில் உன்னதமான இடத்தை தமிழ்நாடு பெற்று வருகிறது. அதனால்தான் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – வேந்தர் பதவியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். பள்ளி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை உருவாக்கிச் செலவு செய்வது மாநில அரசு!

மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் வரை நமது போராட்டம் தொடரும்!

பேராசியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு! பல்கலைக்கழகங்களுக்குத் தேவை யான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவது மாநில அரசு! ஆனால், வேந்தர் பதவி மட்டும், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவருக்கா? அதுதான் நம்முடைய கேள்வி. அதனால்தான் சட்டப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம்! மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் வரைக்கும் இந்தச் சட்டப்போராட்டங்களும் – அரசியல் போராட்டங்களும் தொடரும்…… என்பதைச் சொல்லி, இங்கு கூடியுள்ள மாணவர்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து… படியுங்கள்… படியுங்கள்… உயர்கல்வி… ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *