சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் நூற்றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் சிறப்பாக விழா நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
நூறாண்டு கடந்த பள்ளிகள்
தமிழ்நாட்டில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கும், மக்களுக்கும் அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதேபோல, மாணவர்களுக்கு உத்வேகமும், ஆசிரியர்களுக்கு உந்துதலும் ஏற்படும்.
மேலும், இவ்விழா பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், உட்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும்.
மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கலைஞர் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 22ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை, ஆண்டு விழாவோடு இணைத்துக் கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சிறப்பான ஏற்பாடு
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்தைத் தடுக்க 15 இடங்களில் மாட்டுக் கொட்டகை
சென்னை, ஜன.22- சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளைத் தடுக்க மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மாட்டுக் கொட்டகைகள் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவல்லிக்கேணிமற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மாடுகள் முட்டி காயமடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
மாட்டுக் கொட்டகை
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சென்றாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இரவு நேரங்களில் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 237 மாடுகளை பிடித்து, ரூ.92 லட்சத்து 4 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 427 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, முதல்முறை பிடிபடும் மாடுகளுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், 2ஆவது முறையாக பிடிபடும் மாடுகளுக்கு அபராத தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் மாநகராட்சி உயர்த்தியது. முதல்முறை பிடிபடும் கால்நடைகளை அடையாளம் காண கால் நடைகளின் உடலில் சிப் பொருத்தவும் திட்டமிட்டிருந்தது. இருப்பினும் மாடுகள் சாலையில் சுற்றி திரிவது தொடர்ந்தது. இந்நிலையில், கால்நடை வளர்ப்போர் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மாட்டுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி, மாட்டுக் கொட்டகைகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் துரை நரசிம்மன் கூறியதாவது:
வாடகை
சென்னையில் 5 ஆயிரம் குடும்பங்கள் மாடுகளை பராமரித்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 30 மாடுகளை பராமரித்து வருகின்றன. மாடுகளை வளர்க்க ஏதுவான கட்டமைப்பை மாநகராட்சி அமைக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு 4 அடி அகலம், 10 அடி நீளம் அளவில் இடம் ஒதுக்க வேண்டும். மாட்டு கொட்டகைகளுக்கான மின்சாரம், குடிநீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம், வரி, கழிவுநீர் கட்டணம் ஆகியவற்றை நாங்களே ஏற்றுக்கொள் கிறோம். ஒரு மாட்டுக்கு வாடகையாக தலா ரூ.50-ம் மாநகராட்சிக்கு செலுத்துகிறோம் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். அதன்படி மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டு வருகிறது. வாடகை விவரங்களை மாநகராட்சி இன்னும் இறுதி செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: ஒவ்வொரு இடத்திலும் சுமார் 200 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 மாட்டுக் கொட்டகைகளை கட்டி வருகிறோம். இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதன்மூலம் மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் சுமார் 3 ஆயிரம் மாடுகள் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டுவிடும். அவற்றால் சாலைகளில் ஏற்படும் தொல்லைகள் குறையும். மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.