கோவில்கள் தொடர்பாக வழக்கு தொடரும், சிறீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்கும்படி, சிறீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில்கள் தொடர்பாக, வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.
அந்த வரிசையில், ‘சிறீரங்கம் கோவிலில் உள்ள, ஆண்டாள், லட்சுமி யானைகளுக்கு, 10 ஏக்கர் நிலத்தை, கொள்ளிடம் ஆற்றங்கரை அல்லது வேறு ஏதேனும் இடத்தில் ஒதுக்க வேண்டும்.’’
‘அந்த நிலத்தில் யானைகளைப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்’ என, 2021 இல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, ‘முதல் அமர்வு’ முன், விசாரணைக்கு வந்தது. அப்போது. மனுதாரர் ஆஜராகி இருந்தார்.
அவரிடம் நீதிபதிகள், ‘தங்களுக்கு இந்த வசதிகள் வேண்டும் என, யானைகள் உங்களிடம் புகார் அளித்தனவா? இந்த வழக்கை தொடர உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த ரங்கராஜன் நரசிம்மன், ‘நேர்மையான முறையில் தான், இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்’ என்றார்.
இதையடுத்து, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனின் பின்னணி குறித்து விசாரிக்க, சிறீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.
‘தினமலர்’, 10.1.2025
இப்படி எல்லாம்கூட நீதிபதிகள் கேள்வி கேட்பது ஆச்சரியம்தான்!
ஆறுகால பூஜை, படையல்கள் நடத்துகிறீர்களே, கடவுள் சாப்பிட்டதா?
பெண் கடவுளுக்கு ஆண் அர்ச்சகர்கள் உடை மாற்றுவது நியாயமா?
கடவுளுக்குச் சக்தியில்லையா? ஏன் தூக்கி செல்கிறீர்கள்? என்றுகூடக் கேட்கலாம் அல்லவா!
– மயிலாடன்