தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை, ஜன. 21- நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு கண்டனங்களை செயலாளருக்கு எதிராக பதிவு செய்தது.
நடவடிக்கை
இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நெல்லை மாவட்டத்தில் 2 கிராமங்களில் 6 இடங்களில் கொட்டப் பட்ட அனைத்து கழிவு களும் அப்புறப்படுத்த பட்டுவிட்டதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக புற்றுநோய் மருத்துவமனை, ஓட்டல் மீது நடவடிக்கை எடுத்துள்ள கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகளை சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள் வியை முன் வைத்தனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு
தொடர்ந்து, தமிழ் நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு பெற்றுதர வேண்டும் என வலியுறுத்தினார். இழப்பீட்டை வசூல் செய்ய கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தொடர்ச்சியாக தாக்கீது மட்டுமே அனுப்பி வருவ தாகவும் கேரளா அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர் பாக இது 3ஆவது வழக்கு. ஒன்றிய மாசுகட்டுப்பாட்டு வாரியம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது தொடர் பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இழப்பீடு பெற்று தருவதற்கு கேரளா அரசு எடுத்துள்ள நட வடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டனர்.