கருஞ்சட்டை
எதையும் திரிப்பது, ‘உல்டாப்‘ செய்வதுதான் ஆரியத்தின் சித்து விளையாட்டு.
தூய தமிழில் பொங்கல் என்று கூறப்படுவதாக ஒப்புக்கொண்ட ‘விஜயபாரதம்‘, ‘மகர சங்கராந்தி‘ என்று நாமகரணமிட்டு, கீதையோடு முடிச்சுப் போட்டு, தேசியத் திருவிழா என்று கதை கட்டுகிறது. (‘விஜயபாரதம்‘, 17.1.2025).
தமிழ்நாட்டின் இனிப்புப் பொங்கல் வட மாநிலங்களில் கிச்சடி, சக்ராத் என்ற பெயர்களில் படைக்கப்பட்டு பிரசாத மாக விநியோகிக்கப்படுகிறதாம்.
பொங்கல் தேசிய திருநாள் என்றால், ஒரே மாதிரி யாகத்தானே இருக்கவேண்டும்.
இனிப்புப் பொங்கல்
கிச்சடியாக மாறுவது ஏன்?
தமிழ்நாட்டில் இனிப்புப் பொங்கல், வடநாட்டில் கிச்சடியாக மாறுவானேன்?
‘‘மகர சங்கராந்தி கொண்டாடப்படுவதன் உட்கருத்தை கீதையில் (3.14) சிறீகிருஷ்ணர் எடுத்துரைத்துள்ளார்.
‘‘அனைத்து உயிரினங்களும் உணவால் ஜீரணிக்கின்றன. உணவானது, மழையினால் உருவாகிறது; வேள்விகளைச் செய்வதால் மழை பெய்கிறது. உரிய கடமைகளைச் செய்வதால் வேள்விகள் நிறைவேற்றப்படுகின்றன.
யக்ஞம் எனப்படும் வேள்வியானது, யாகத் தீயை மூட்டி செய்யப்படுகின்ற சடங்குகள் மாத்திரம் அல்ல. மனிதர்கள் அவர்களுக்குரிய கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதும் ஆகும் என்பதைத்தான்
யக்ஞ: கர்ம ஸம் உத்பவ:
என்று சிறீகிருஷ்ணன் கூறியுள்ளார்’’ என்று கதை யளக்கிறது ‘விஜயபாரதம்.’
புராண அகராதி என்று கூறப்படும் அபிதான சிந்தா மணியோ கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் ஏற்பட்ட சண்டை என்று இதை சித்தரிக்கிறது.
சாராயம் குடித்தவனை தேள் கொட்டினால் எப்படி உளறுவான்… அப்படித்தான் இவர்கள் குவிக்கும் புராணக் குப்பைகள்.
‘‘இந்திரன் மழை வருஷிப்பவன். ஆதலால் அவன் செய்த நன்மையின் பொருட்டு, தை மாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்த பின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலை குலைந்து மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாற, கிருஷ்ணன் கோவர்த்தன மலையை எடுத்து குடைபிடித்துக் குடிகளைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு, கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகங்களை ஒருவரை ஒருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் கூறுவர்.’’
இப்படியொரு கதையளப்பு! கடவுளுக்குள்ளேயே உன்னைவிட நான் பெரியவன் என்ற சண்டை மூள்வதும், கோபம் கொண்டு மழையைப் பொழிந்தான் இந்திரன் என்றும், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அதைத் தடுத்தான் என்பது எல்லாம் எவ்வளவுக் கேலிக்குரி யது! கடுகளவு புத்தியுள்ள கோவணங்கட்டாத சிறுவன்கூட கைகொட்டி நகைப்பானே!
தகிடுதத்தம் எல்லாம்
அவாளுக்கே உரியதாயிற்றே!
வேள்வி நடத்தினால் மழை பொழியுமா? அது ஒருபுறம் இருக்கட்டும்; ‘விஜயபாரதம்’ கூறும் அந்த வேள்வி என்பது என்ன? நெருப்பினில் ஆடு, மாடு, குதிரைகளைக் கொல்லுவதுதானே! அதனை எவ்வளவு ‘சாமர்த்தியமாக’ மறைக்கவேண்டும்! ஓ, ஆர்.எஸ்.எஸ். இதழ் ஆயிற்றே – இந்த் தகிடுதத்தம் எல்லாம் அவாளுக்கே உரியதாயிற்றே!
இன்னொரு கூத்தைப் பாருங்கள்:
‘‘உணவின் மூலமே உலகில் உயிர்கள் வாழ்கின்றன. இயற்கையின் துணை கொண்டு உணவுப் பொருளை மனிதன் உருவாக்கும் தொழிலே விவசாயம். மனிதன் தனது கடின உழைப்பான உழவின்மூலம் உணவை உற்பத்தி செய்தபோதிலும், அதற்கு உறுதுணை புரிந்த இறைவன், இயற்கை, சக தொழிலாளர்கள், இன்ன பிற உயிரினங்கள், கருவிகள் ஆகியவற்றிற்கு நன்றிக் கடன் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுவதே இந்தப் பண்டிகை’’ என்று சாங்கோ பாங்கமாக உழவின் சிறப்பை உழவனின் உழைப்பைத் தீட்டித் தள்ளியுள்ளது.
‘விஜயபாரதம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழ் விவசா யத்தை இப்படி எல்லாம் உச்சியில் சுமந்து ஊஞ்சலாடுகிறதே!
விவசாயத்தைப்பற்றி மனுதர்ம சாஸ்திரம் கூறுவது என்ன?
இந்த விவசாயத்தைப் பற்றி இவாளின் மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?
‘‘பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருது கின்றனர். ஆயினும் பெரியோர் அதனைப் பாராட்ட வில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகின்றதன்றோ.’’ (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 84).
இதற்கு என்ன பதில் ‘‘விஜயபாரதமே!’’
மனுதர்மத்தைக் காப்பாற்றப் போகிறீர்களா? அல்லது மகர சங்கராந்தியைக் காப்பாற்றப் போகிறீர்களா?
கடைசிக் கடைசியாக ஒரு கேள்வி:
பதில் உண்டா?
‘‘தேசியத் திருவிழா பொங்கல்’’ என்று தலைப்பிட்டு, நான்கு பக்கங்கள் வரிந்து தள்ளியுள்ளீர்களே, அப்படியானால், அந்தப் பொங்கலுக்குத் தேசிய விடுமுறையை அறி விக்காதது ஏன்?
அந்த நாளில் தேர்வுகளை நடத்துவது ஏன்? ஏன்? ஏன்?
பதில் உண்டா? பார்ப்போம்!