புதுடில்லி,ஜன.21- காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் திட்டத்திற்கு கண்டிப்பாக தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டமானது கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘வரைவு திட்டங்கள், அதில் இருக்கும் சாதக பாதகங்கள் ஆகியவை குறித்த ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரிமாறிக் கொள்வதோடு, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நிராகரிப்பு
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் உமாபதி மற்றும் குமணன்,’ காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கருநாடக அரசு முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் வழங்கி வருகிறது.
மேலும் திட்டம் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கருநாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “தமிழ்நாட்டின் காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு இடைக்காலமாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்கப்படவில்லை.
அப்படி இருக்கும் போது திட்டத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும். அது சாத்தியமே கிடையாது. இந்த விவகாரத்தில் கருநாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது.
மேலும் காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.