புதுடில்லி, ஜன.20 திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்பால் அந்த முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
ஆந்திராவின் திருப்பதி – திரு மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச அனு மதிச்சீட்டு, திருப்பதியில் பல்வேறு மய்யங்களில் வினியோகிக்க கடந்த 9ஆம் தேதி ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இதை வாங்க, 8ஆம் தேதி காலை முதலே, சிறப்பு கவுன்டர்கள் முன் ஏராளமானோர் குவியத் துவங்கினர். இதில், சீனிவாசம் கவுன்டரில் கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதேபோல், திருமலையில் உள்ள லட்டு கவுன்டரில், மின்கசிவு காரணமாக கடந்த 13ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நேரடி விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜின்டால் நியமிக்கப்பட்டார்.
இவர், திருமலை மற்றும் திருப்பதி யில் விபத்து நடந்த பகுதியில் விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில், ஒன்றிய அரசின் தலையீடு முன்னெப்போதும் இல்லாத அளவு உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.
இதையடுத்து, நேரடி ஆய்வு விசாரணையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சீவ் குமார் ஜின்டாலின் வருகை ரத்து செய்வது குறித்த தகவலை, தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.