தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு
திருநெல்வேலி ஜில்லா நான்காவது சுயமரியாதை மாநாடு 4.4.1931 அன்று தூத்துக்குடியில் எஸ்.ராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மூன்று மைல் தூரம் 500க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. சி.டி.நாயகம், வீ.தா. செல்லையா உள்ளிட்ட பெருந்தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தூக்குக் கயிற்றுக்கு முற்றமிட்டு உயிர் நீத்த மாவீரன் பகத்சிங் தியாகத்தை போற்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த சிந்தனையுடன் எழுதப்பட்ட தலையங்கம் இது.
சுயமரியாதை இயக்கம் சம்பந்தமான மகாநாடுகளும், பிரச்சாரக் கூட்டங்களும் தமிழ்நாட்டில் எவ்வளவு மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்பதோடு அதன் கொள்கைகள், நடைமுறையில் நடந்து எவ்வளவு பயனளித்து வருகின்றதென்பதை பற்றி நாம் யாருக்கும் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.
எதிர்ப் பிரச்சாரங்கள்
இவ்வியக்கப் பிரச்சாரத்தில் ஒரு பாகம் காங்கிரசையும், காந்தியத்தையும் தாக்கியும், உப்புச் சத்தியாக்கிரகத்தை எதிர்த்தும் வந்ததாகும் என்பதை நாம், யாரும் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியமில்லாமலே ஒப்புக் கொள்கிறோம். அதோடு மாத்திரமல்லாமல், (நாம் சென்ற வருஷ ஆரம்பத்தில் தெரிவித்தது போலவே) இதன் பயனாய் நம்மீது பலருக்கு அதிருப்தியும், துவேஷமும், கோபமும் ஏற்பட்டு நமக்கும் நமது பத்திரிகைக்கும் விரோதமாகப் பலவித எதிர்ப் பிரச்சாரங்கள் செய்ய நேர்ந்ததும், அதனால் பல சில்லரைச் சங்கடங்கள் விளைந்ததும் பலர் அறிந்ததேயாகும். எப்படியிருந்த போதிலும் ஆரம்பத்தில் நாம் வெளிப்படுத்திய கொள்கைகளில் சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், அவை சம்பந்தமான நமது அபிப்பிராயத்தை நாம் ஒண்டியாய் இருந்தபோதிலும் சிறிதும் மறைக்காமலும் நமக்குச் சரி என்று பட்டதை யெல்லாம், பல நண்பர்களும், நமது நன்மையில் பற்றுள்ளவர்களும் தடுத்தும் தாராளமாய் எழுதிக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டுமே வந்தோம். அதன் பலன் என்ன ஆயிற்று என்பதைப் பற்றி அறிய விரும்புகின்றவர்கள் காங்கிரசின் நடவடிக்கைகளையும், காங்கிரசின் சென்ற வருஷ நடவடிக்கையின் அறிக்கையையும் கவனித்துப் பார்த்தால் தாராளமாய் விளங்கிவிடும்.
சுமார் 4 வருஷங்களுக்கு முன்பாக திரு. காந்தியவர்கள் தமிழ் நாட்டில் கதர் பண்டுக்குப் பணம் வசூலிக்க வந்த சமயத்திலும் நாம் ஒருவரேதான் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து பண வசூலைக் கண்டித்து வந்தோம். மற்ற பத்திரிகைகளும், தேசியவாதிகளும் மற்றும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட அநேகர் அதை ஆதரித்ததுடன், பணமும் உதவி வந்ததோடு நம்மையும் கண்டித்து வந்தார்கள். அதனால் எவ்வித பலமான பயன் ஏற்படாவிட்டாலும், ஒரு சிறு அளவுக்காவது அவரது வசூல் பாதிக்கப்பட்டது என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் அது நடந்த கொஞ்ச நாளிலேயே அதற்குப் பணம் கொடுத்தவர்கள் உள்பட அநேகர் அக்காரியத்தில் தாங்கள் நடந்து கொண்டதற்கும், பணம் கொடுத்ததற்கும் வருந்தினார்கள் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம் வேண்டுமானால் அதே திரு. காந்தி அவர்கள் இப்போது தமிழ்நாட்டில் பண வசூலுக்கு வந்தால் என்ன ஆகுமென்பதை நினைத்தால் விளங்கும்.
உப்புச் சத்தியாக்கிரகம்
அதுபோலவே உப்புச் சத்தியாக்கிரகத் தைப் பற்றியும் நாம் கண்டிக்கும்போது பலர் நம்மீது வருத்தப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை யும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட கஷ்டம், நஷ்டம் ஆகியவை எவ்வளவு என்பதைக் கவனித்தவர்களுக்கு ஒருவாறு விளங்கி இருக்கும்.
கோயில், குளம், உற்சவம் முதலிய வைகள் எவ்வளவு அநாகரிகமானதும், ஒழுக்கக் குறைவானதும், அறிவற்றதும், நஷ்டமும், நாட்டுக்குக் கேடும் உள்ளதுமாயிருந்தாலும் பூசாரிகளும், புரோகிதர்களும், புராணக்காரரும், புலவர்களும், புத்தகக் கடைக்காரர்களும் உள்ளவரை எப்படி அவை ஒழியாதோ, ஒழிப்பதும் மிக்கக் கஷ்டமோ அதுபோலவே காங்கிரசும், காந்தியமும், கதரும், தேசியம், சுயராஜ்யம் என்பவைகளும் எவ்வளவு பித்தலாட்டமானதானாலும், நாட்டு முற்போக்கிற்கு விரோதமானதானாலும், சுதந்திரத்திற்கும், சமதர்மத்திற்கும் முட்டுக்கட்டை போடுவதானாலும், பலரின் சுயநல வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்விற்கு மாத்திரம் பயன்படுவதானாலும், பார்ப்பனரும், படித்தவர்களும், வக்கீல்களும், பதவி, பட்டம் பெற ஆசைப்பட்டவர்களும், பத்திரிகை பிழைப்புக்காரர்களும், ‘தேசபக்தர்களும்’, ‘தேசிய வீரர்களும்’, கதர் வியாபாரிகளும், கதர் தொண்டர்களும் உள்ளவரை நிலைத்துத்தான் தீரும். அதை ஒழிப்பதும் சுலபமான காரியமல்ல. ஆகையால், எதிர் பிரச்சார அளவுக்கு உடனே பயன் எதிர்பார்க்க முடியாது என்பது மாத்திரமல்லாமல், அதனால் நமக்குக் கஷ்டமும் உண்டாகலாம் என்பதும் நமது அபிப்பிராயமாகும்.
ஆனபோதிலும் நம்மைப் பொருத்த வரை நாம் தைரியத்தை விடவில்லை. அபிப்பிராயங்களில் சந்தேகமில்லை. நம்பிக்கையில் குறைவேற்படவில்லை. எதிர்க்கும் முயற்சியையும், ஊக்கத்தையும் சிறிதும் தளர்த்திக் கொள்ளவில்லை. ஒரு பத்து வருஷம் பொருத்தாவது நமதபிப்பிராயத்தைச் சரியென்று மக்கள் ஒப்புக் கொள்ளுவார்கள் என்கின்ற தைரியத்துடனேயே நமது வேலையைச் செய்து வருகின்றோம்.
கடவுள் அவதாரம்
இன்றைய தினம் கடவுள் அவதாரம், லோககுரு என்கின்ற சங்கராச்சாரியார்கள் படுகின்ற பாட்டுக்கும், பண்டார சன்னதிகள் மகாசன்னிதானங்கள் என்னும் மடாதிபதிகள் படுகின்ற பாட்டையும் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கடவுள், கடவுள் அவதாரம், ஆழ்வார், நாயன்மார்கள் என்கின்றவைகள் படுகின்ற பாட்டையும் பார்த்தால் அவைகளைவிட எத்தனையோ பங்கு தாழ்ந்ததாய் மக்களால் மதிக்கப்படும் காங்கிரசும், காந்தியமும், கதரும் ஒரு காலத்தில் சிரிப்பாய் சிரிக்கப்படும் என்பதில் யாருக்கும் ஆட்சேபணையோ, பயமோ வேண்டியதில்லை என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஏனெனில், முன் சொல்லப்பட்ட காரியங்களில் நம்பிக்கையும், பக்தியும் பிழைப்புக்கு மார்க்கமும் கொண்டவர்களாலேயேதான் பின் சொல்லப்பட்டவைகளிலும் நம்பிக் கையையும், பக்தியையும், பிழைப்புக்குக் கொள்ளப்பட்டனவாக இருக்கின்றன.
விஞ்ஞான தத்துவம்
ஆகவே, அவர்களது புத்தி இரண்டி லும் ஒன்று போலவே தான் செல்ல முடியும் என்பது விஞ்ஞான தத்துவமான உண்மையாகும். ஆகையால், ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கி விட்டோமேயானால் பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக் கூடியவர்களாகி விடுவார்கள் என்பதோடு இந்த தொண்டைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்து வருகின்றது என்றும் சொல்லுகின்றோம். இதற்காகவே ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கியமான மகாநாடு
அப்படிச் செய்யப்படுபவைகளில், இதுவரை நடந்து வந்த மகாநாடுகளில் தூத்துக்குடியில் நடந்த திருநெல்வேலி ஜில்லா 4வது சுயமரியாதை மகாநாட்டை ஒரு முக்கியமான மகாநாடு என்றே சொல்லாம். எதனாலெனில் அது கூட்டப்பட்ட இடம், அதன் தலைவர் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவைகளினாலேயாகும். திருநெல்வேலி ஜில்லாதான் முதன்முதல் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டியது. அவற்றுள் தூத்துக்குடியானது மிகவும் உணர்ச்சியுள்ள ஊராகும். அதன் தலைவர் சுயமரியாதை இயக்கத்தின் உருவமாய் விளங்குபவர். தீர்மானங்களோ சுயமரியாதை இயக்கத்தின் மிகவும்ட உறுதியும், தைரியமும் கொண்ட உண்மை தோற்றமாகும். மகாநாட்டுத் தலைவர் உபந்யாசமானது தைரியமாக உண்மைகளை வெளிப்படுத்திய ஒரு முக்கியதஸ்தாவேஜு என்றே சொல்லலாம்.
– தொடரும்
தூத்துக்குடி சுயமரியாதை
மகாநாட்டின் தீர்மானங்கள்
1. (a) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கை களுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.
(b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.
(c) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.
2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் – உழுகின்றவன், முதலாளி – தொழிலாளி, ஆண் – பெண், மேல்ஜாதி – கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.
3. (a) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண் களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக் கப்பட வேண்டுமென்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது.
(b) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.
4. 1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும்,
2. தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும்,
3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும்
4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும்,
5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
குடிஅரசு – தீர்மானங்கள் – 12.04.1931