சென்னை, ஜன. 20- பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஅய்சிடிஇ) கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஅய்சிடிஇ வெளியிடுகிறது. அவற்றை முறையாக பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொடர் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஅய்சிடிஇ வழங்கும். இதுதவிர, கல்லூரிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
நீட்டிப்பு
அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டன. இதையடுத்து, அங்கீகாரம் நீட்டிப்பு, திறந்தநிலை, இணையவழி படிப்புக்கான அனுமதி, புதிய கல்லூரிகள் மற்றும் படிப்புகள் தொடங்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க ஏஅய்சிடிஇ அழைப்பு விடுத்தது. மண்டல வாரியாக கல்லூரிகள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் கடந்த ஜனவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இந்த அவகாசம் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறியலாம் என்று ஏஅய்சிடிஇ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
மே மாதம் திறக்கப்படுகிறது
சென்னை, ஜன. 20- கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலமாக, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளில் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்யமுடியும்.
புதிய பேருந்து நிலையம்
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கரில் பரப்பளவில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லாமல் இருக்கின்றது. இதனால், பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், வண்டலுார் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜன. 2ஆம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது.
பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக, மேலும் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 3 நடைமேடைகள் இடம்பெற உள்ளன. இந்த நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்த முடியும். தற்போது, ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு மே மாதத்தில் பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் நிலையம், தென் மாவட்டங்களிலிருந்து நீண்ட தூர பேருந்துகளில் கிளாம்பாக்கத்தை பயணிகள் அடைகிறார்கள். அங்கிருந்து அவர்கள் எளிதாக நகருக்குள் செல்ல மின்சார ரயில்கள் உதவியாக இருக்கும்.
தற்போது, கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையை அடைய, பயணிகள் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ஆட்டோகளில் சென்று அங்கிருந்து மின்சார ரயிலைப் பிடிக்க வேண்டும். இதற்காக, பயணிகள் அதிகக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.