*மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவக் குணம் உண்டு என்று அய்.அய்.டி. இயக்குநர் கூறுவது எவ்வளவு பெரிய ஆபத்து!
*14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மாட்டு மூத்திரத்தில் இருப்பதாக கால்நடை ஆய்வு நிறுவனம் கூறுகிறதே!
அரசமைப்புச் சட்டம் 51A(h) க்கு விரோதமாக செயல்படுபவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மாட்டு மூத்திரத்திற்கு நோய் எதிர்க்கும் சக்தி உண்டு என்று அய்.அய்.டி. நிறுவனர் காமகோடி கூறியிருப்பது அறிவியலுக்கு விரோதம் மட்டுமல்ல – மக்கள் உயிரோடு விளையாடுவதாகும் – இவர் இந்தப் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘எனது அப்பாவுக்குக் ஜுரம் அடித்தது. டாக்டரிடம் போகலாமா என்று என் அப்பா கேட்டார். அப்பொழுது அங்கு வந்த சந்நியாசி “கோமூத்ரம் பிபாமி” அப்டின்னாராம். உடனே மாட்டுல கோமூத்ரத்த எடுத்துண்டு வந்தாராம். கடகடகடன்னு குடிச்சாராம் அப்பா .15 நிமிஷத்தில ஜுரம் போய்டுத்தாம். அதனால, Anti bacterial, Anti fungal, Digestive, Stomach Irritable Bowel Syndrome இது மாதிரி பலதுக்கு, கோமியம்-ங்கிறது பெரிய பெரிய மெடிசின். இந்த மெடிசினல் வேல்யூவை நம்ம எடுத்துக்கணும்.” என்று ஒருவர் பேசியிருக்கிறார்.
மாட்டு மூத்திரம்பற்றி அய்.அய்.டி. இயக்குநர்
உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடக்கும் சமயம் என்பதால், ஏதாவது சாமியார் பேசியதாக இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். பேசியிருப்பவர் இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான சென்னை அய்.அய்.டி.(IIT) இயக்குநர் திருவாளர் காமகோடி என்பவர். சென்னையில் கடந்த ஜனவரி 15, மாட்டுப் பொங்கல் அன்று ஒரு ‘கோ சம்ரக்ஷன சாலா’வில் நடைபெற்ற விழாவில் தான் இப்படித் தன் அறிவியல் அறிவைக் (!) காட்டியிருக்கிறார். சொன்னவர் யார் என்பதை அவர் பெயரே சொல்லி விடும்.
மாட்டு மூத்திரத்தில் மருத்துவக் குணம் உள்ளது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? இவரது தலைமையில் செயல்படும் அய்.அய்.டி தான் அக்கிரகாரக் கூடாரமாயிற்றே! அவர்கள் இத்தகைய ஆய்வுகள் எதை யாவது செய்து பன்னாட்டு அரங்கில் சமர்ப்பித் திருக்கிறார்களா? செய்தால் அகில உலகமும் இவர்களது அறிவின் திறத்தைக் கண்டு வியக்கும் அல்லவா?
2023 ஆம் ஆண்டு நாளேடுகளில் வெளி வந்த செய்தி இதோ:
உ.பி. கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
என்ன கூறுகிறது?
மனிதர்கள் எந்த வகையிலும் பசு மூத்திரம் உட்கொள்ளக் கூடாது, ஆபத்தானது என்று கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-Indian Veterinary Research Institute (IVRI)) அறிக்கை வெளியிட்டுள்ளது. (11, ஏப்ரல் 2023)
உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) மேற்கொண்ட ஆய்வின்படி, பசு மூத்திரத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்ப தால் அது நேரடி மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் போஜ் ராஜ் சிங் தலைமையில் மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் மேற் கொண்ட ஆய்வில், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளில் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் உயிர்கொல்லி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை நுகர்விற்குப் பிறகு இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளை உருவாக்கும் எஸ்செரிசியா கோலை பாக்டீரியா அதில் அதிகம் காணப் பட்டது.
இச்செய்தி அந்நாளைய டைம்ஸ் ஆப் இந்தியா, சி.என்.பி.சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு
51A(h) எதிராக நடந்து கொள்ளலாமா?
அறிவியல் ரீதியான ஆய்வுக்கு மாறாக ஓர் அறிவியல் நிறுவனத்தின் தலைவர் பேசுவதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(எச்) கூறும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் இந்தியக் குடிமக்களுக்கான கடமையைச் செய்ய வேண்டிய, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஒருவரே இவ்வாறு கூறுவதா? மூடநம்பிக்கையை வளர்க்க அல்லவா பேசுகிறார் திரு.காமகோடி வீழிநாதன்!
அது மட்டுமல்ல, அறிவியலுக்கு எதிரான ஒன்றை ‘மெத்த படித்த மேதாவி’ கூறும் போது, அது மக்களின் உயிருக்குச் சவாலாகி விடுகிறதே! இது கிரிமினல் குற்றம் அல்லவா?
நியாயப்படி மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகையவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?
அய்.அய்.டிக்களில் கொட்டப்படும் கோடிக் கணக்கான பணம் எப்படிப்பட்டவர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கு இவர்களின் பேச்சு தான் சான்று!
தகுதி- திறமை என்னும் மாய்மாலத்தின் பெயரால், இடஒதுக்கீட்டை மறுத்து, சமூக நீதியை முற்றாக நிராகரிக்கும் கும்பலின் திறமை எப்படிப்பட்டது என்பதை நிரூபிக்கும் சாட்சி இது!
அய்.அய்.டி. இயக்குநர் பொறுப்பில்
இவர் நீடிக்கலாமா?
ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. ஆட்சியில் இந்திய அறிவியல் துறை படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறதே! பிள்ளையார் உருவாக்கம்தான் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்பவரைப் பிரதமராகக் கொண்ட நாட்டில் அறிவியல் துறையில் யார் அமர்த்தப்பட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?
அறிவியலுக்கு மாறாக, மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசும் இத்தகை யோருக்கு இந்தியாவின் அறிவியல் அடை யாளமாக முன்னிறுத்தப்படும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் தகுதி உண்டா? அறிவியல் துறை வல்லுநர்கள் இதனை மறுத் துரைக்க வேண்டியது அவசியமாகும்.
சிந்திப்பீர்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
20.1.2025