சென்னை, ஜன.19-– உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் வரும் ஜனவரி 20 முதல் 24ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்க்ளோஸ்டர்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அரசு பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
50 கூட்டங்கள்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளதால், அவர்களுடன் 50 கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், மத்திய கிழக்கு மற்றும் அய்ரோப்பிய பிராந்திய நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களை சந்திப்பதுடன், அய்ரோப்பியாவில் உள்ள தமிழ் தொழில் முனைவோர் களையும் தமிழ்நாடு அரசு குழுவினர் சந்திக்க உள்ளனர்.
உலக முதலீட்டாளர்களுடன் உறவுகளை மேம்படுத்துதல், மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் திறனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுதல், வளர்ந்து வரும் உலகளாவிய திறன் மய்ய துறையில், தகவல் தொழில்நுட்பம், சேவை துறைகளை மேம்படுத்துதல், மெட்டெக், ஹெல்த்கேர், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி ஆகிய புதிய துறையில் முதலீடுகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது.
முதலீட்டாளர்களுடன் சந்திப்பு
இந்த ஆலோசனையின் போது, “தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வர வேண்டும் என்று பல்வேறு நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து பேசவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திட்டமிட்டுள்ளார். ‘நுண்ணறிவு கலத்திற்கான ஒருங்கிணைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள அமர்வில் ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டகுழுவுடன் தமிழ்நாடு அரசுகுழுவும் கலந்து கொள்கிறது. இந்த குழுவில் ஆந்திரம், மராட்டியம், தெலங்கானா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 6 இந்திய மாநிலங்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது, “டாவோஸ் மாநாட்டில் ‘வளர்ச்சியில் முன்னேறிபாயும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம். மத்திய கிழக்கு நாடுகள், அய்ரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் பேச்சு நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தொழில் செய்து வரும் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்களையும் முன்னிறுத்தி முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்கிறோம். தமிழ்நாட்டின் சாதன அம்சங்களை உலகப் பொருளாதார மாநாட்டில் முன்னிறுத்தி முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.