தனியார் பள்ளிகளுக்கு இணையாக
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு
புதுடில்லி, ஜன.19 கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகள் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதன் உள் கட்டமைப்பு தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (Unified District Information System for Education) தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு 14.72 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள், 98.08 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 24.80 கோடி குழந்தைகளை உள்ளடக்கிய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் தொடங்கப்பட்ட தகவல் அமைப்புகளில் ஒன்றாகும். இந்த விவரங்கள் 2023-2024 ஆம் ஆண்டு விவ ரங்கள் ஆகும். இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் மின்சாரம், மாணவ- மாணவிகளுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள், கை கழுவும் வசதிகள் மட்டுமல்ல, நூலகங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் பள்ளிகளில் பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பங்க ளிப்பை படம்பிடித்துக்காட்டியுள்ளன.
மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள்
2013-2014 ஆம் ஆண்டில் 45 சதவீத அரசுப் பள்ளிகளில் தேவையான மின்வசதி செய்யப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி (90 சதவீதம்) உள்ளது. கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ள பள்ளிகள் 2013-2014 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது இது மூன்று மடங்காக (51 சதவீதம்) அதிகரித்துள்ளது. நூலகங்கள் அமைத்துக்கொடுத்துள்ளது, மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வது அரசுப்பள்ளிகளில் அதிகரித்துள்ளது.
அதாவது தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசுப்பள்ளிகள் இந்த இரண்டு விஷயங்களிலும் மேம் பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டோடு 2024 ஆம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 75 சதவீத கிராமப்புற அரசுப் பள்ளிகளில் குடிநீர், மின்சாரம், போதுமான கழிப்பறைகள் நூலகங்கள், விளையாட்டு மைதா னங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் அளவிற்கு கிராமப்புறப் பள்ளிகளின் உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி களுக்கான இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது.
கேரளம்-தமிழ்நாடு
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் தரவு ஒரு விடயத்தை பளிச்செனத் தெரிவித்துள்ளது.
அதாவது கழிப்பறை வசதி பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் 90 சதவீதம் செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் டில்லி போன்ற மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரசுப்பள்ளி கள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் இன்னும் மேம்பாடு அடையவேண்டியுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வந்த மின்சார வசதி கொண்ட அரசுப் பள்ளிகளின் பங்கு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தற் போது இது 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்பது ஆறுதலான விஷயமாகும்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு விடயங்களில் அரசுப்பள்ளிகள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், கணினிகள் வழங்குவது, இணைய இணைப்புகள் கிடைப்பது, மழைநீர் சேகரிப்பு போன்றவற்றில் தொடர்ந்து பின்தங்கியுள்ளன. அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது தனியார் பள்ளிகளில் கணினிகள் கிடைப்பது அதிகமாக உள்ளது. கேர ளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் தனியார் பள்ளிகள் (90 சதவீதம்) ஆதிக்கம் செலுத்துகின்றன. தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டு 49 சதவீத பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி இருந்தது. 2024 ஆம் ஆண்டில் இது 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பீகார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் பின்னடைவு
கணினிகள் பொருத்தப்பட்ட அரசு பள்ளிகளைப் பொறுத்தமட்டில் 2024 ஆம் ஆண்டில் பீகார் (12 சதவீதம்), மேற்கு வங்கம் (19 சத வீதம்), உத்தரப்பிரதேசம் (29 சதவீதம்) என மிகவும் பின்தங்கியுள்ளன. சத்தீஸ்கர், ஜார்க் கண்ட், அரியானா, ஒடிசா ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.