மருத்துவ அறிவியல் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த எல்.இ.டி. பல்ப் அகற்றம் அரசு மருத்துவர்கள் சாதனை

viduthalai
3 Min Read

மதுரை, ஜன.18 குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த சிறிய எல்.இ.டி. பல்ப்-அய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர். மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை கடும் காய்ச்சல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் மூச்சு குழாயில் சிறிய எல்.இ.டி. பல்ப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் நுரையீரல் அகநோக்கி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த எல்.இ.டி பல்பை பாதுகாப்பாக அகற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளது.

சைபர் குற்றங்கள் குறித்து
ஜன.29இல் மெரினா கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நடைப்பயணம்

சென்னை, ஜன.18 சைபர் குற்றங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 29ஆம் தேதி மாலை மெரினா கடற்கரை சாலையில் ‘சென்னை 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்’ நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் இணைய வழி குற்றப்பிரிவு சார்பில் வரும் ஜனவரி 29ஆம் தேதி மெரினா கடற்கரை சாலையில் மாலை 5 மணிக்கு ‘சென்னை 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்’ நடத்தப்பட உள்ளது. இது பயணம் இணையத்திலுள்ள சைபர் குற்றங்களின் தடுப்பு பற்றியும் மற்றும் அதனை சமூகத்தில் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடைமுறைகளை ஊக்கு விப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடைப்பயணமானது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து வகை நபர்களையும் சேர்ந்த சைபர் குற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

விழிப்புணர்வு

இந்நிகழ்ச்சி, சைபர் குற்றங்களை குறித்து மக்களை விழிப்புணர்வுப்படுத்தி தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மற்றும் ஆன்லைன் தனியுரிமையை பராமரிப்பதில் உதவும் நோக்கமாக கொண்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க அழைக்கிறோம். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நடைப்பயணம் முடிந்தவுடன் பங்கேற்புக்கான அடையாளமாக ‘பிளாக் செயின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ்’ வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு https:1930walkathon.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்குள் குமுறல்
நெல்லை மாவட்ட தலைவர் விலகல்

நெல்லை, ஜன.18 நெல்லை மாவட்ட பாஜ தலைவராக கடந்த பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்த தயாசங்கர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். பாஜவில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட பாஜ தலைவர் தயாசங்கர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

இதுகுறித்து தன் சமூக வலைதளத்தில், “இத்துடன் பாஜ கட்சியில் என் அரசியல் பயணம் நிறைவடைகிறது. என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். தயாசங்கர், நெல்லை பாஜ சட்டமன்ற உறுப்பினரும் பாஜ சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை
புதிய குழு அமைப்பு

புதுடில்லி, ஜன.18 அணையின் பாதுகாப்பு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏழு பேர் கொண்ட புதிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில் நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள கூடுதல் தலைமைச் செயலாளர் கிஸ்வாஸ், தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர் என ஒன்றிய அரசு 16.1.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *