புதுடில்லி, ஜன.17 1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதில் தங்களை இணைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15, 1947 நிலவரப்படி வழிபாட்டுத் தலங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அயோத்தி ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கைத் தவிர வேறு யாரும், பிற வழிபாட்டுத் தலங்களின் இடங்களுக்கு உரிமை கோரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. எனினும், இந்துக் கோயில்கள் இருந்த இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டதாகக் கூறி பலர் உரிமையியல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இத்தகைய வழக்குகளை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இது ஒருபுறம் இருக்க, வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 செல்லாது என அறிவிக்கக் கோரி, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள காங்கிரஸ், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சார்பில், வழக்குரைஞர் அபிஷேக் ஜெபராஜ் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்த சட்டம் 10-ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, இதன் முக்கியச் சிற்பி காங்கிரஸ்தான். உண்மையில் இந்தச் சட்டம் 1991-ஆம் ஆண்டு உருவாக்கப்படுவதற்கு முன்பே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் அப்போதைய தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றது.
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில்,
10-ஆவது மக்களவையில் பெரும் பான்மை உறுப்பினர்களைக் கொண்டி ருந்தது காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் கட்சியும்தான். இந்தியாவில் மதச் சார்பின்மையைக் காக்க வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் அவசியம். மதச்சார்பின்மையின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், இந்த சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
காங்கிரஸ் விருப்பம்
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் அரசியலமைப்பு மற்றும் சமூக முக்கியத்துவத்தை வலியு றுத்துவதற்காக இந்த வழக்கில் தலையிட காங்கிரஸ் விரும்புகிறது. சட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமானால் அது நாட்டின் மத நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
தேசியவாதம் மற்றும் சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மதச்சார்பின்மை வளர்ந்தது. இது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பையும் அனைத்து மதங்கள் தொடர்பாக அரசின் நடுநிலைமையையும் உறுதி செய்கிறது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மத சுதந்திரத்துக்கான உரிமையை மேலும் மேம்படுத்துகிறது. அது அரசியலமைப்பின் நிறுவப்பட்ட அடிப்படை அம்சமாகும். வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மதச்சார்பற்ற அரசின் கடமைகளுடன் உள்ளார்ந்த முறையில் தொடர்புடையது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.