மீரட்,ஜன.17-மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் மருத்துவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகாததால் கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு பரிசோதனை செய்ததில் அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையில் சென்று முறையிட்டபோது அவர்கள் மறுத்ததுடன், போலி ஆவணம் ஒன்றை கொடுத்து அவரது 2 சிறுநீரகங்களும் இருப்பதாக சாதித்தனர். அத்துடன் அவருக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மீரட் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் அந்த மருத்துவமனை இயக்குநரும், மருத்துவருமான சுனில் குப்தா மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன.21,22இல் சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜன.21,22இல் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் ஜன.21,22இல் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். ஜன.21இல் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதலமைச்சர், ஜனவரி 22ஆம் தேதி காலை சிவகங்கை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதலமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு வரும்
நீரின் அளவு வினாடிக்கு 151 அடியாக சரிவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 254 கன அடியில் இருந்து 151 அடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், அணையின் நீர் இருப்பு 83.542 டிஎம்சியாக உள்ளது.
முட்டுக்காட்டில் அமையவுள்ள
கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு
சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது!
சென்னை,ஜன.17- முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தின் கட்டுமான பணிகளை, 2025ம் ஆண்டின் இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை ஊத்து பகுதியில்
7 செ.மீ. மழை பதிவு..!!
நெல்லை,ஜன.17- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை காக்காச்சியில் 5 செ.மீ., மாஞ்சோலையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.