இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழ்நாடு மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஜன. 17- இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழ்நாடு மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி மற்றும் நவம்பர் 11ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுவிப்பு

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதங்கள் எழுதினார். இதைத்தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரையும் விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்து இருந்து, அவர்களை விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து 15.1.2025 அன்று இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 15 மீனவர்களும், சென்னைக்கு திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், அவர்களுடைய சொந்த ஊர்களான ராமநாதபுரம், நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *