ராமன் செருப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் நடந்த மதக் கலவரத்திற்குப் பிறகு அங்கு ஹிந்துத்துவ அமைப்பினர் ‘பாதுகா யாத்ரா’ (ராமர் செருப்பு ஊர்வலம்) நடத்தினர்.
அந்த ஊர்வலத்தில் மாவட்ட காவல் ஆணையர் (தலைமைக் காவல் அதிகாரி) அர்ஜூன் சவுத்ரி, ஹிந்துத்துவா கும்பலோடு சேர்ந்து கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் செல்கிறார்.
இதனைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது? மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து; மனிதனுக்குப் பிடித்தாலும்
ஆபத்து என்பது விளங்கவில்லையா?
அய்.பி.எஸ். படித்த ஒரு காவல்துறை ஆணையர் எவ்வளவு அடிமட்டத்திற்குச் சென்றுள்ளார்!
இராமன் காடேறிய பின், பரதன் அரசனாகப் பட்டம் சூட்டிக் கொள்கிறான்.
வனவாசியாக இருந்த அண்ணன் ராமனை அரசனாக இருந்த பரதன் காட்டிற்கு வந்து சந்திக்கிறான். நாட்டுக்கு வந்து அரசனாகப் பட்டம் சூட்டிக் கொள்ளுமாறு அழைக்கிறான். ராமன் மறுக்கிறான்; தன்னுடைய பாதரட்சையைத் (அதாவது செருப்பை) தன் தம்பி பரதனிடம் கொடுத்தனுப்புகிறான்; அண்ணன் – ராமன் வரும்வரை பரதன் அந்த செருப்பை அரியணையில் ஏற்றி அரசாளுகிறான்.
இந்த நாட்டையே செருப்பு ஆண்டிருக்கிறது என்று பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் சொல்வதுண்டு.
இது அப்போது நடந்ததாக இராமாயணம் கூறுகிறது. பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமன் கோவி்ல கட்டப்பட்ட இந்தக் காலகட்டத்தில், அய்.பி.எஸ். அதிகாரி கதாயுதத்துடன் பங்கேற்கிறார்.
இது மதச்சார்பற்ற அரசாம்!
அப்படித்தான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது!
– மயிலாடன்