புதுடில்லி, ஜன. 16- தேர்தல் விதிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
பொது ஆய்வு
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசு, கடந்த 10.1.2025 அன்று, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93-ல் சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ)-வில், ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு அந்த விதியில், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என மாற்றப்பட்டுள்ளது.
வழக்கு
அதாவது, வேட்பாளரின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் காட்சிப் பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்தப் பிரிவை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (15.1.2025) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.
தாக்கீது
அப்போது காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராயினர். இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அதற்கு முன்பாக இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.