விழுப்புரம், ஜன.16 வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில், 3.1. 2025 அன்று விழுப்புரம் ஏஜிஎஸ் திருமண மண்டபத்தில், காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையில், மாநில செயல் தலைவர் உஸ்மான் கான், மாநில துணைத்தலைவர் நூருல்லா, துணை பொதுச்செயலாளர் நூர் முகமது ஆடலரசன், சோபா தேவி ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
ஏழாம் ஆண்டு தொடக்க விழா நல உதவிகள் வழங்கும் விழா வாக நிகழ்வுகள் அமைந்தன சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் விழுப்புரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் பேசிய நெல்லை மரைக்காயர் பேசியதாவது:
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி குவைத் நாட்டிற்கு வருகை தந்தார்கள். மறைந்த குவைத் பெரியார் நூலகப் பொறுப்பாளர் செல்லப்பெருமாள் அழைப்பின் பேரில் நடைபெற்ற நிகழ்வில், வெளிநாடு வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டோம். மதியம் உணவு இடைவேளையில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்பும் பெற்றோம். அப்போது எங்களின் பிரச்சினைகளை, கோரிக்கைகளை தலைவர் இடத்தில் எடுத்து வைத்தோம். அந்த சமயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தலைவர் கலைஞர் இருந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் சொன்னார், ‘‘நான் தமிழ்நாட்டிற்குச் சென்றவுடன் முத லமைச்சரிடத்தில் உங்களுடைய கோரிக்கை களை எடுத்துரைப்பேன்’’ என்றார்.
அதன்படி ஆசிரியர், முதலமைச்சரிடத்தில் எங்கள் பிரச்சினையை, வெளிநாடு வாழக்கூடிய தமிழர்கள் பிரச்சினையை எடுத்துரைத்தார்கள். அதன் விளைவாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் மற்றும் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் காலத்தில் வெளி நாடு வாழ் தமிழர்களுக்கு என்று தனித்துறை அமைச்சகம் போன்ற உரிமை வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதற்கு கால் கோள் போட்டவர் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் என்றால், மிகையான வார்த்தைகள் இல்லை. நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட திராவிடர் கழக சார்பில், இன்று எங்கள் நிகழ்வில் பங்கேற்று உரிமை குரல் எழுப்பிய பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு நெல்லை மரைக்காயர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மாநாட்டில் பங்கேற்ற பலரும் தமிழர் தலைவரின் திராவிடர் கழக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனில் காட்டும் அக்கறையை பாராட்டினார்கள்.
நிகழ்வில் திராவிடர் கழக நிர்வாகிகள், ப.க. தலைவர் ஆ.மு.ரா.இளங்கோவன், நகர செயலாளர் பழனிவேலு, மாவட்ட இளை ஞரணி பொறுப்பாளர் சதீஷ், வழக்குரைஞர் பார்த்திபன், வடலூர் முருகன் , எனதிரி மங்கலம் ராஜேந்திரன், தீன. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விழுப்புரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் மற்றோருக்கும் நல உதவிகள் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வழங்கினார். விருதுகள் வழங்கி ஆடைகள் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.