உண்மையான சுதந்திரம் ஆகஸ்ட் 15 அல்ல ராமர் கோயில் கட்டப்பட்டது தான் இந்தியாவில் உண்மையான சுதந்திரமாம்
புதுடில்லி, ஜன.16 ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
சுதந்திரம்
டில்லியில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று (15.1.2025) திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: மிகவும் முக்கியமான நேரத்தில் புதிய தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-இல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.
மதிப்பீடுகள்
ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும். இந்த காங்கிரஸ் கட்டடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசமைப்பு ஆகும்.
மோகன் பாகவத் பேசும்போது, அரசமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டடத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன.
பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவ னத்தையும் கைப்பற்றி உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்.
தாக்குதல்
குற்றங்களை விசாரிக்க வேண்டிய ஒன்றிய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் பயன்படுத்தப் படுகின்றன. பாஜகவின் கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி இருக்கின்றன. நமது நாட்டில் இருவிதமாக கருத்து மோதல்கள் இருக்கின்றன. அவை அரசமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்டுள்ளன.
மகாராட்டிரா மற்றும் அரியானா பேரவைத் தேர்தலில் தகவல்களைத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர் இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.