‘‘காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில். இந்த கோயில் பண்டைய சமய நூல்களில் திருக்கச்சி யேகம்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் மண் ஸ்தலம் ஆகும். தற்போது, தைப்பூசத்துக்காக மேல்மருவத்தூர் வரும் ஆந்திரா மற்றும் கருநாடக மாநில பக்தர்கள், சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் என பலரும் வருவதால் ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. ஏகாம்பரநாதரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.
இந்நிலையில்தான், கோயிலில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ரவுடிகள் சிலர் கோயில் ஊழியர்கள் போல் உள்ளே நுழைந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்துவதுபோல் அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். பக்தர்களும் இவர்களைக் கோயில் ஊழியர்கள் என்றே நினைக்கின்றனர். இடையில் இவர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் தனியே உள்ளே அழைத்துச் செல்கின்றனர். இதுகுறித்து அங்கு யாரேனும் கேள்வி எழுப்பினால், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் நொந்து ஏகாம் பரநாதனை தரிசிக்கிறார்கள், அந்தோ பாவம்!’ (அர்ச்சகர்களுக்கும் இந்த அடியாட்களுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம்)
வரிசையை ஒழுங்குபடுத்த கோயில் ஊழியர் களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கோயில் ஊழியர்கள் என்பது பக்தர்களுக்கு தெரியும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்கினால் இதுபோல் உள்ளே ஊடுருவும் இடைத்தரகர்களை தவிர்க்கலாம் என்று பலரும் வலியுறுத்துகின்றனர். இதேபோல் கோயில் கோபுரத்துக்கு உள்ளே ஒரு வாகனங்கள் நிறுத்தும் இடமும் (பார்க்கிங்) கோயில் கோபுரத் துக்கு வெளியே ஒரு நிறுத்தும் இடமும் உள்ளன. கோபுரத்துக்கு உள்ளே வாகனங்களை நிறுத்துபவர் களிடம் கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது.
வெளியே மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்ட ஒரு நிறுத்தும் இடம் உள்ளது. உள்ளே முறைப்படி கட்டணம் செலுத்திவிட்டு வாகனங்களை எடுத்து வரும் சிலரிடம் வெளியேயும் பணம் கேட்டு தகராறு செய்கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் கேட்டபோது, ‘சுற்றுலா வழிகாட்டி என்ற பெயரில் சிலர் உள்ளே வருவது பிரச்சினையாவதாக என்னிடம் கூறினர்.
சில வெளிநபர்கள் அலுவலகத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் இதுபோல் உள்ளே நுழைந்து பிரச்சினை செய்கின்றனர். கோயில் பணியாளர்கள் சீருடையில் இருப்பார்கள். அவர்களுக்கு சீருடை வழங்கி இருக்கிறோம். இதுபோல் வெளிநபர்கள் உள்ளே வந்து கோயில் நிர்வாகங்களில் தலையிடு வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கூறும் போது, ‘ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்டம் அதிகம் உள்ளது. அவர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்ப கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் ஊழியர்களுக்குச் சீரூடை இருந்தாலும் பலர் அதை அணிவதில்லை. இதனால் வரிசையை ஒழுங்குபடுத்துபவர்கள் கோயில் ஊழியர்களா? அல்லது வெளிநபர்களா? என்பது தெரியாத நிலை உள்ளது. வெளிநபர்கள், ஊழியர்கள்போல் உள்ளே நுழைந்து ஒழுங்கை சீர்குலைக்கின்றனர்’ என்றார்.
கோயில்களில் நடக்கும் சீர்கேடுகளைத் தடுக்கவும், கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு நடத்தவும் இந்து சமய அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். தைப்பூசம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் காவல்துறையினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோயில்கள் புனித இடங்கள் அங்குள்ள கடவுள் சக்தி வாய்ந்தது என்று கூறுவதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை என்பது இப்பொழுது விளங்குகிறதா?
உண்மையைச் சொல்லப் போனால் இந்த ஏகாம்பர கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இந்தக் கோயிலின் வெளியில் சுவரில் சில புத்த விக்ரகங்கள் பலகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவரைக் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்ரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன என்கிறார் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி (ஆதாரம்: ‘பவுத்தமும் தமிழும்’’ பக்கம் 54).