லக்னோ, ஜன.13 உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் ரயில் நிலையத்தில் புதிய முனையத்துக்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் கட்டடம் ஒன்றுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு கூரைக்காக கான்கிரீட் போடும் பணிகள் நடந்தது. இதில் கான்கிரீட் கலவை கொட்டியதும் பாரம் தாங்காமல் அது இடிந்து விழுந்தது. உடனே அங்கிருந்து பயங்கர புழுதி கிளம்பியது. அங்கே நின்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
மேற்கூரை இடிந்து விழுந்ததும் அங்கே பணியில் இருந்த தொழிலாளர்களும் கீழே விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே உயர் அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தகவல் அறிந்து தேசிய மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கே விரைந்து சென்றனர்.பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளை தொடங்கினர்.
இந்த திடீர் சம்பவத்தில் 28 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியது தெரியவந்தது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது.