பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பயங்கரம்
கிறிஸ்துமஸ் கொண்டாடிய பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து கழிவுகளை ஊற்றி அடித்து உதைத்து ஹிந்துத்துவ அமைப்பினர் வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோரில், கிறிஸ்துமஸ் கொண்டாடிய பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டி வைத்து தேவசேனா என்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் பாதிப்பிற்குள்ளான பெண்களின் உறவினர் புகார் அளித்த போது சொந்தப் பிரச்சினைகளுக்காக காவல் நிலையம் வரவேண்டாம் என்று கூறி மிரட்டி அனுப்பிவிட்டனர்.
சமுக வலைத்தளங்களிலும் காணொலி தொடர்பாக பரவும் இந்த பல்சோர் நீல்கிர் (ஒடிசா) காவல்துறையும் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பொதுவாக இது போன்ற காணொலி வந்து வந்துவிட்டால் அம்மாவட்ட காவல்துறை குற்றவாளிகள் குறித்து விளக்க காணொலி ஒன்று வெளியிடும். ஆனால் வட மாநிலங்களில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகள் குறித்து அப்பகுதி காவல்துறை அமைதிகாக்கிறது.
ஒடிசாவில் பிரிவினை வாதத்தை தூண்டி முதல் முதலாக பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– – – – –
மிரட்டும் சங்கிகள்
ஸநாதனம் குறித்து தவறான தகவலைப் பரப்புகின்றனர் என்று கேரள முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்திருந்தார் குடியரசுத் துணை தலைவர் ஜெய்தீப் தன்கர்.
இதே பீகாரைச் சேர்ந்த ஜனக் மட் என்ற மடத்தின் சாமியார் கைத் துப்பாக்கியைக் காட்டி மிகவும் மோச மான பேச்சுக்களைப் பேசி, ‘‘ஒவ்வோடு கடுவே (இஸ் லாமியர்கள் குறித்த இழிச்சொல்) சுட்டுக் கொல்லுவேன் ஆகவே பாகிஸ்தானுக்குச் சென்று விடுங்கள்.
நான் உண்மையான ஸநாதனி” என்று பேசினார்.
– – – – –
இந்தியாவில் இருக்கவேண்டுமென்றால் ஜெய் சிறீராம் சொல்ல வேண்டுமாம்!
இமாச்சல பிரதேசத்தில் கம்பளி வியாபாரம் செய்ய வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முதியவரையும், அவரது மகனையும் மிரட்டி ‘ஜெய் சிறிராம்’ சொல்லும் படி கட்டாயப்படுத்திய பெண் பஞ்சாயத்து உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா அருகே கந்தர்பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா தேவி. இவர் நகர்மன்ற மேம்பாட்டுக் கமிட்டியின் உறுப்பினராக உள்ளார். இந்த பகுதியில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் கம்பளி, போர்வை வியாபாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காஷ்மீரின் குப்வாரா பகுதியை சேர்ந்த முதியவர் அலி முகமது மிர் என்பவர் தனது மகன் பிர்தோஸ் அகமது மிர்ருடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது போர்வை வியாபாரிகளான தந்தை மகன் இருவரையும் சுஷ்மா தேவி அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். அவர்களிடம் நாம் இந்தியாவில் இருக்கிறோம். இந்தியர்கள் என்பதை நிரூபிக்க ‘‘ஜெய் சிறீராம்” சொல்லுங்கள். இதற்கு அவர்கள், “எங்களை ஜெய் சிறீராம் சொல்லச் சொல்கிறீர்களா? ஆனால் நாங்கள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். உங்களிடம் ஒருவர் குரான் ஓத சொன்னால் செய்வீர்களா?” என பதில் கேள்வி கேட்டனர்.
இதையடுத்து சுஷ்மா தேவி, “இவர்கள் 2 பேரிடம் எந்த பொருட்களையும் யாரும் வாங்க கூடாது. இருவரும் இந்த ஏரியாவுக்கு மீண்டும் வியாபாரம் செய்ய வரக்கூடாது” என எச்சரிக்கை செய்துள்ளார். அதோடு இந்த நிகழ்வும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிப்பதிவு வெளியானது. அதோடு இதனை ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாசீர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனால் காட்சிப் பதிவு வேகமாக பரவ தொடங்கியது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட 2 வியாபாரிகளும் ஆலம்பூர் காவல்துறையில் புகாரளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுஷ்மா தேவியை பிடித்து விசாரித்தனர்.
இதுபற்றி காங்க்ரா காவல்துறை கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிகோத்ரி கூறுகையில், “இந்நிகழ்வு தொடர்பாக சுஷ்மா தேவி மீது பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 299இன்படி வழக்குப்பதிவு (குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கையை அவமானப்படுத்துதல் அல்லது மதத்தை அவமானப்படுத்துதல்) செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் சுஷ்மா தேவி மன்னிப்பு கோரி 49 விநாடி காட்சிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சுஷ்மா தேவி, நான் எனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பாதிப்புக்கு உள்ளான அலி முகமது மிர் கூறுகையில், “காஷ்மீரில் உள்ள எனது குடும்பத்தினர் கவலையடைவார்கள் என்பதால் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிப்பதிவை வெளியிட வேண்டாம் என்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கடந்த 25ஆம் தேதி மாலையில் எனது உறவினர் பஷ்மிர் அகமது மிர் என்பவர் இமாச்சலில் துணி வியாபாரம் செய்கிறார். அவர் என்னிடம் இந்த காட்சிப்பதிவை காட்டினார். அதோடு என்னையும், என் மகனையும் காவல் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார். காவல் நிலையம் சென்ற நிலையில் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது காஷ்மீரில் குளிர்காலம். இந்த காலத்தில் குளிர் அதிகம் இருக்கும். இதனால் குளிரில் இருந்து விடுபட காஷ்மீர் கம்பளிகளை இமாச்சல பிரதேசத்தில் விற்பனை செய்வோம். எனது மூத்த மகன் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நான் என் இளைய மகனுடன் இங்கு வந்து வியாபாரம் செய்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக இங்குவந்து செல்கிறோம். ஆனால் இப்போது தான் இப்படியான சம்பவத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தவறு செய்த டிடி (சகோதரி) மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனை நாங்கள் பெரிதாக்க விரும்பவில்லை” என்றார்.
– – – – –
ஹிந்து வியாபாரிகளுக்கு காவிக்கொடி
இஸ்லாமிய வியாபாரிகளுக்கு
நான் முஸ்லீம் என்ற ஸ்டிக்கராம்!
தலைநகர் டில்லியில் உள்ள வினோத் நகர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரவீந்திர சிங் கையில் பஜ்ரங் தள் கொடியையும், ஸ்டிக்கரையும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கடையிலும் பெயர் கேட்கிறார்.
கடைக்காரர்கள் தங்கள் முதலாளியின் ஹிந்து பெயர் கூறினாலும் உனது பெயர் என்ன என்று கேட்டு அவர் முஸ்லீமாக இருந்தால் இந்த கடையை நடத்தும் நான் முஸ்லீம் என்ற ஸ்டிக்கரை ஒட்டுகிறார்.
அதே நேரத்தில் ஹிந்துக்களாக இருந்தால் அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு கடையில் பஜ்ரங்க் தள் கொடியை வைத்து விட்டு செல்கிறார். அவர் பேசும் போது இது ஹிந்து நாடு இங்கு ஹிந்துக்களின் உரிமைகள் பறிபோகிறது.
ஆகவே ஹிந்துக்கள் ஹிந்துகடைகளில் பொருட்கள் வாங்கவேண்டும் இதற்காகவே பஜ்ரங்தள் கொடியை கடைகளில் வைக்கிறேன் – காரணம் அவர்கள் பாதுகாப்பை வழங்குவார்கள்.
அதே நேரத்தில் முஸ்லீம்கள் தங்களின் உண்மை யான பெயரை மறைத்து விற்பனை செய்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பொருட்கள் யாரும் வாங்க கூடாது என்பதற்காக முஸ்லீம் கடை என்ற அடையாளத்தை ஓட்டுகிறோம் என்று கூறினார்.
புதுடில்லி வினோத் நகர் பகுதி இவர் தேர்ந் தெடுக்கபப்ட்ட மாநகராட்சி வட்டம் ஆகும் இங்கு ஹிந்து முஸ்லீம் சீக்கியர்கள் உள்ளனர். மூன்று சமயத் தினருமே சரி சமமாக இருக்கும் இந்த தொகுதியில் இவர் வெற்றிக்கு முஸ்லீம்களின் வாக்குகளையும் பெற்றுத்தான் இவர் கவுன்சிலராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
– – – – –
தலைநகர் டில்லியிலேயே
இந்த நிலை என்றால்???
தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமையாத இந்தக் கால கட்டத்திலேயே இந்தக் கொடூரம் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலையில் பெரும்பான்மை பலத்தோடு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு எக்கெடுதிக்கு ஆளாகும்?
மனுதர்மம் என்னும் ஹிந்து பார்ப்பன ராஜ்யம் ஆபத்து! ஆபத்து!!