பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள்
சென்னை, ஜன.11 சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று (11.1.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதலில் எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் ‘பராசக்தி’ படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார், ‘இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’. அதேபோல் இந்தச் சட்டமன்றமும், ஆளுநரைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைத்தான் காண்கிறது. ஆளுநர் அவர்கள் வருகிறார், உரையாற்ற வருகிறார். ஆனால், உரையாற்றாமலேயே சென்றுவிடுகிறார். அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ளபடி, ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை மரபு. ஆனால், திட்டமிட்டு விதிமீறல் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். 2021-ஆம் ஆண்டு இப்போதிருக்கும் ஆளுநர், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022-ஆம் ஆண்டு இதே ஆளுநர், தன்னுடைய முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை. ஆனால், இந்த மூன்றாண்டு காலமாக என்னென்ன அபத்தமான காரணங்களை எல்லாம் சொல்லி படிப்பதை தவிர்த்தார் என்று இந்த அவையில் இருக்கும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்! பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், அவை நடவடிக்கைகள் முடியும்போது நாட்டுப்பண் ஒலிப்பதும்தான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு. இந்த விளக்கத்தைச் சொன்ன பிறகும் அவர் உரையாற்ற மறுக்கிறார், தவிர்க்கிறார்! தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது!
இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் நான், சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால் இந்த சட்டமன்றம், நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றம் ; கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சட்டமன்றம். இந்த சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல் – மக்களது எண்ணங்களுக்கும் மதிப்பு தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தையே அவமானப்படுத்த துணிந்ததன் மூலமாக, தான் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் காரியத்தை அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது; இனியும் காணக் கூடாதது!
அவர் அரசியல் ரீதியாக எங்களைப் புறக்கணிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால், திராவிட இயக்கம் என்பதே, புறக்கணிப்புகள்-அவமானங்கள்- ஒடுக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக உதயமானதுதான்! இந்த இயக்கத்தின் மேல் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைகளையும் மீறித்தான் நூற்றாண்டு கண்டிருக்கிறோம். ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, ஆறாவது முறை ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு, திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் உண்டு. நிச்சயமாக சொல்கிறேன், ஏழாவது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் அமையப் போகிறது. அதற்கு அடித்தளமான இந்த ஆறாவது முறை ஆட்சி அமைந்தபோது, “இது விடியல் ஆட்சியாக அமையும்” என்று சொன்னோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் “விடியல் எங்கே” என்று கேட்கிறார்கள். விடியல் தரப்போவதாக சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலைப் பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.
விடியலின் அடையாளம் எது?
விடியலின் அடையாளம் எது தெரியுமா? நான் செல்கின்ற இடமெல்லாம் கூடுகிற மக்களின் முகங்களில் தெரிகிற மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம்! மாதந்தோறும் ஒரு கோடியே 14 இலட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்களே, அப்போது அவர்கள் முகங்களைப் பாருங்கள், அதில் தெரியும் அந்த மகிழ்ச்சிதான், விடியல் ஆட்சி! “தாய்வீட்டுச் சீர் மாதிரி-எங்கள் அண்ணன் ஸ்டாலின் தருகிற மாதாந்திரச் சீர்” என்று என்னரும் தமிழ்ச் சகோதரிகள் மனம் மகிழச் சொல்கிறார்களே, அதுதான் விடியலின் ஆட்சி. ஆட்சிப் பொறுப்பேற்றதும் கோட்டைக்குச் சென்று நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். இந்த விடியல் பயணமானது, மகளிரின் சேமிப்பை அதிகரித்திருக்கிறது. மாதந்தோறும் 600 முதல் 1,200 ரூபாய் வரை அவர்களுக்கு மிச்சம் ஆகிறது; அதைச் சேமிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை இது அதிகரித்திருக்கிறது. அந்த பேருந்துக்கு ‘ஸ்டாலின் பஸ்’ என்றே பெயர்
வைத்துவிட்டார்கள். இதுதான் விடியல் ஆட்சி!
அடுத்து, என்னுடைய கனவுத் திட்டமான ‘நான் முதல்வன் திட்டம்’. “எத்தனையோ தொழில்களைத் தொடங்குகிறீர்கள், அதிலே பணியாற்ற திறமைசாலிகளாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கித் தாருங்கள்” என்று சொன்னதை வைத்துதான், இந்தத் திட்டத்தை உருவாக்கினேன். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் 22 இலட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற, பல இலட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில், இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது. இதுதான் விடியல் ஆட்சி! அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர், கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம்தான், புதுமைப் பெண் திட்டம். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகியிருக்கிறது. இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 இலட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கிறோம். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார், “என் குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. பணம் இல்லை, அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார். புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும், என் அம்மா சம்மதம் தெரிவித்தார். ஆனால், தினமும் பஸ்ஸில் போக வேண்டுமே என்று அவர் சொன்னார். அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன்.
பாச உணர்வு
ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி நான் தற்போது படித்துக்கொண்டு வருகிறேன்” என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான், விடியலுக்கான சாட்சி! அதனால்தான், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை ‘அப்பா, அப்பா’ என்று வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இந்தப் பாச
உணர்வுதான் முக்கியம்!
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாகப் பலனடையும் வகையிலான திட்டங்களைத் தீட்டும் ஆட்சிதான் உதயசூரியன் ஆட்சி! இந்த ஆட்சி உருவாகியபோது, இதை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று நான் சொன்னேன். ‘திராவிட மாடல்’ என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று சொல்கிற மாதிரி, ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள்! ‘திராவிட மாடல்’ என்றால், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், இரத்த பேதம் இல்லை, பால் பேதமில்லை, விளிம்புநிலை மக்கள் நலன், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரத்தில் பங்கு, மதச்சார்பின்மை, தொழில் வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், கூட்டாட்சிக் கருத்தியல், அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள், தமிழுக்கு உரிய இடம், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை, சமூகக் குறியீடுகள் அனைத்திலும் முதன்மை; இவைதான் திராவிட மாடல் அரசினுடைய உள்ளடக்கம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்று அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியைச் சொல்கிறோம். இதைத்தான் ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று சொல்கிறோம். திராவிடக் கருத்தியல் கொள்கையால்தான் தமிழ்நாடு
இன்று வளர்ந்த மாநிலமாக இருக்கிறது!
பொருளாதார மாநிலம்
தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு கடந்த 40 ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டியிருக்கிறது. வறுமைக் குறியீடுகளில் இந்தியாவின் சராசரி விழுக்காடு என்பது 14.96 ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் சராசரி 2.2 விழுக்காடாக இருக்கிறது.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றிருக்கிறது. இந்திய நாட்டின் மொத்த பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்கள் பெருகியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. டெல்லியில் இருக்கிற தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காக, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கி பாராட்டியிருக்கிறது. இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமான
பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதுதான் ‘திராவிட மாடலின்’ சாதனை!
போராட்டம் நடத்துகிற உரிமை இல்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், “அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கிறீர்கள்” என்றுதான் என்னை சிலர் விமர்சிக்கிறார்களேதவிர நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள். அது என்னுடைய இயல்பும்கூட இல்லை.
சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கைப் பற்றி சிலர் இங்கே குறிப்பிட்டார்கள். என் தலைமையிலான அரசு காவல் துறை சுதந்திரமாக செயல்படுகிறது. ரவுடியிசத்தில் ஈடுபடுகிறவர்கள் மேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கொலைகள், ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலைச் சம்பவங்கள் மற்றும் ரவுடிகள் தொடர்புடைய ஜாதிய கொலைச் சம்பவங்கள் குறைந்திருக்கிறது. எங்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது. மீறி குற்றம் நடந்தால், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படுகிறார். எந்தக் குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவது இல்லை. உரிய தண்டனை, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது.
கருப்பு சட்டை
இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சியடையிறேன். கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வரலாம். அது உங்கள் உரிமை, அதில் நான் தலையிட விரும்பவில்லை. என்னோட கேள்வியெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை மதிக்காமல் ஓர் ஆளுநர் நடந்துகொள்கிறார். அவரைக் கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியைகூட தர மறுத்து, இரக்கமில்லாமல் நடந்துகொள்கிற ஓர் ஒன்றிய அரசினைக் கண்டித்து, நீங்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் நான் உங்களை வாழ்த்தியிருப்பேன், மகிழ்ச்சியடைந்திருப்பேன். தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளிக் கல்வியையும், யூஜிசி மூலமாக கல்லூரிக் கல்வியையும் சிதைக்க நினைக்கிற, பாசிசக் கல்விக் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டையை நீங்கள் அணிந்திருந்தால், மனதார உங்களைப் பாராட்டியிருப்பேன். ஆட்சியில் இருந்த காலம் முதல் பா.ஜ.க.-க்கு நீங்கள் துணையாக நின்றிருக்கிறீர்கள். இருட்டு அரசியல் நடத்துகிறவர்களுக்கு கருப்புச் சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்.
எங்களைப் பொறுத்தவரைக்கும், தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். தேர்தலின்போது சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம்.
நெருக்கடி
நான் முன்பு சொன்ன பல்வேறு திட்டங்களையும் மிக, மிக நெருக்கடியான சூழலில்தான் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம் என்பது மனசாட்சியுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு பக்கம், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு கால பாதாளத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்திருக்கிறோம். இன்னொரு பக்கம், ஒன்றிய அரசானது தமிழ்நாடு அரசை தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசானது, மாநில அரசினுடைய கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவது மட்டுமில்லாமல், அந்தத் திட்டங்களை முடக்குகிற சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின்கீழ், ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளங்கள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் கல்வி நிறுவனங்களுக்கு மீள வழங்க வேண்டிய பொறுப்பு, பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்த திட்டத்தின்கீழ் வரப்பெறக்கூடிய நிதியானது மிக முக்கியமானது. எத்தனையோ தடவை நாம் நினைவூட்டிக் கேட்டிருக்கிறோம். இதுவரை மானிய உதவித் தொகையை விடுவிக்கவில்லை. இதன் விளைவாக, இந்தச் செலவினங்களை மாநில அரசே தனது சொந்த வருவாயிலிருந்து மேற்கொண்டு வருகிறது. தேசிய உயர்கல்வி இயக்கத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிற திட்டங்களையும் தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திணிப்பதால், இந்தத் திட்டங்களும் இப்போது முடங்குகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு 6 ஆயிரத்து 675 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பீடுகள் செய்யப்பட்டு, நிதி விடுவிப்புக் கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. கடந்த நிதியாண்டில், மிக்ஜாம் புயல் தாக்கியது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிக கனமழை ஏற்பட்டது. இந்த இரண்டு பேரிடர்கள் தாக்கிய பிறகும், மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை, அதுவும் நான்கு மாத தாமதத்திற்கு பிறகு, ஒன்றிய அரசு அனுமதித்தது. இது, மாநில அரசு கோரிய 37 ஆயிரத்து 906 கோடி ரூபாயில் ஒரு விழுக்காடுகூட இல்லை.
ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் வழங்கவேண்டிய 4 ஆயிரத்து 142 கோடி ரூபாயில், 732 கோடி ரூபாய் மட்டும்தான் வழங்கியிருக்கிறார்கள். நிதியின்மையினால் திட்டங்களின் செயல்பாடு சுணங்கக் கூடாது என்பதற்காக நாம்தான் நம்முடைய நிதியை கொடுத்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.
இந்த திராவிட மாடல் அரசு மேற்கொண்ட செலவுகளை பொறுத்தவரை, தமிழ்நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 3 ஆண்டுகளில் பல மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களின் நலனுக்காகத்தான். விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படக்கூடிய செலவுகள் எல்லாம் வெட்டிச் செலவுகள் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் நினைக்கிறாரா என்பதுதான் என்னுடைய கேள்வி?
டங்ஸ்டன் திட்டம்
அடுத்து, மீண்டும், மீண்டும் டங்ஸ்டன் பற்றி கிளப்பி மதுரை மக்களை குழப்ப பார்க்கிறார்கள். கனிம வளங்கள் விஷயத்தில், மாநில உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிற சட்டத்தை ஆதரித்து, டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு வழிவகுத்தது அ.தி.மு.க.தான்! ஆனால், நாங்கள் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திலே எதிர்த்தோம். அவர் ஆதரித்து பேசியதற்கு பதிவு இருக்கிறது. உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை பேசியதற்கு பதிவு இருக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் அந்த கனிம வள திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆதரித்து, வரவேற்றுப் பேசியிருக்கிறார்கள்.
ஆனால், நாங்கள் நாடாளுமன்றத்திலே இதை எதிர்த்திருக்கிறோம். சட்டமன்றத்திலும் சொல்லியிருக்கிறேன். நான் முதலமைச்சராக இருக்கும்வரை இந்தத் திட்டம் வராது என்ற தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அதையும் மீறி சொன்னேன் அப்படி வந்தால் இந்தப் பதவியில் நான் இருக்கமாட்டேன். அப்படி உறுதியாக, இறுதியாகச் சொல்லியிருக்கிறேன்.
ஏழு தனி சிறப்பு நீதிமன்றங்கள்
மேலும், என் பதிலுரை வாயிலாக முக்கியமான சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு, முன்விடுதலை கிடைக்காதவகையில தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.
3 ஆயிரம் பேருந்துகள்
இரண்டாவது அறிவிப்பு. மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும்வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புர சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியோடு இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கிறேன்.
மூன்றாவது அறிவிப்பு. பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும்.
ஒரு இலட்சம் வீட்டு மனை பட்டாக்கள்
நான்காவது அறிவிப்பு. இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 இலட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும் புதியதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
எங்களுக்கு வாக்களித்த மக்களும், எங்களுக்கு வாக்களிக்காத மக்களாக இருந்தாலும், எங்கள் மனச்சாட்சிதான் நீதிபதிகள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், முழு உழைப்பை தந்து, நாங்கள் ஆட்சி நடத்திக்கொண்டு வருகிறோம். அடுத்து அமையப் போகும் அரசும், திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதில் எங்களுக்கு இம்மி அளவும் சந்தேகமில்லை; தமிழ்நாட்டு மக்களுக்கும் சந்தேகமில்லை. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாக இருப்பவன். இதைத்தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. ‘என்னுடைய சிந்தனையும் செயலும் தமிழ்நாடு, தமிழ்நாடு என்றும் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையுமே சுத்தி, சுத்தி வருகிறது.
பொற்கால ஆட்சி
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்கள் உருவாக்கிக் கொடுத்த கொள்கைகளை தலைவர் கலைஞர் வழிநின்று காப்பேன். தமிழினத் தலைவர் கலைஞர் அடித்தளமிட்ட நவீனத் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக, முன்னோடி மாநிலமாக உயர்த்திக் காட்டுவேன். மக்களாட்சிக் காலத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று வரலாறு பதிவு செய்யும். இந்தப் பொற்கால ஆட்சியே
காலம் காலமாகத் தொடரும்! தொடரும்! தொடரும்!
கடந்த 3 நாட்களில் மொத்தம் 25 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 10 உறுப்பினர்கள் 112 திருத்தங்களை வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசுக்கு உதவுகிறவகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். தங்களுடைய தொகுதிக்கான கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். அவை உரிய அனைத்தும் அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. உங்களுடைய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, அதில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும்.
இவ்வாறு முதலமைச்சர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.