தமிழ்ப் புத்தாண்டின்
தகைசால் பொங்கலே
தன்மான வாளேந்தி
தலைநிமிர்ந்து
வாழ்த்துப் பாடுகிறோம்!
உன்வரவு நல்வரவாகட்டும்
வருக வருகவே!
பயிர்த் தொழிலைப்
பாவம் என்பார்
பசியையும்
போக்குவாய் நீ!
உழைக்காமல் உண்டு
கொழுப்பதற்கே
உஞ்சி விருத்திகள்
மதத்தோடு முடிச்சுப்
போட்டுவிட்டார்
அறுவடைத் திருவிழா
அகிலமெங்கும் உண்டே
அதுதான் நம்மினத்தின்
பொங்கல் பொன்னாள்!
அதற்கும்கூட
சங்கராந்தி என்று
காவி வண்ணம்
பூசியது
சதிகாரக் கூட்டம்!
ஆரியப் பண்பாட்டுப்
படையெடுப்பு எனும்
பாம்பின்
படம் எடுப்பு இது!
தன்மான இயக்கத்துத்
தாயின் தலைப் பிள்ளையாய்
பிறந்தாய் நீ!
தை என்று பெயர்சூட்டி
தமிழ்ப் பண் பாடுகிறோம்!
தீபாவளியைச்
சுட்டுப் பொசுக்கி
திராவிட வாசத்தோடு
வந்துதித்தாய்!
பழைமைச் சழக்குகள்
பற்றி யழியட்டும்
பொங்கல் பானையின்
அடுப்பினில்!
சமூக நீதியின்
குயில் பாட்டு
கேட்கட்டும்
எங்கும் எங்கும்!
பகுத்தறிவுப் பொங்கலாய்ப்
பொங்கி வருவாய் நீ!
பூரித்துக் கைதட்டுகிறோம்
மதவாதம் மடியட்டும்
மனிதநேயம் மலரட்டும்!
மக்கள் வாழ்வில்
மகிழ்ச்சி குலுங்கட்டும்!
சர்க்கரைப் பொங்கலே
சமத்துவத் தோப்பில்
மக்களைக் குளிப்பாட்டு!
இல்லறத்தோடு
தொண்டறம் பேணும்
தூயக் காற்றை
மனிதம்
சுவாசிக்கட்டும்!
சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வெனும்
சுத்த தங்கம்
ஜொலிக்கட்டும்!
பகுத்தறிவுப் பேராசான்
தந்தை பெரியார்
என்னும் கோள்
உலகெங்கும்
சுழலட்டும்! சுழலட்டும்!!
பொங்கலோ
பொங்கல்!