1933இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுவிட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஈரோட்டுக்கு வந்து; தமது சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு நேரில் வந்து அழைத்த சூழல்!
சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மவேலைத் திட்டம் காங்கிரசுக்கும், நீதிக் கட்சிக்கும் அனுப்பப்பட்ட நிலையில் நீதிக்கட்சி ஏற்றுக் கொண்ட அரசியல் நிலவரம் (23.9.1934).
பொதுவுடைமைத் தத்துவ வினா-விடைகள், 1917 புரட்சியின் சுருக்கம், பொதுவுடைமை கார்ல் மார்க்சின் சரித்திரச் சுருக்கம் போன்ற நூல்கள் ‘குடிஅரசு’ புத்தகாலயம் என்கிற பெயரில் வெளிவந்து கொண்டிருந்தன.
வெள்ளையர் அரசு சுயமரியாதை இயக்கத்தின்மீது குறி வைத்துவிட்டது. அச்சுறுத்தல், அடக்குமுறை என்கிற ஆயுதங்களைப் பயன்படுத்தியது; அடுத்த கட்டம் தடைதான்.
இந்த நிலையில் தந்தை பெரியார் பொதுவுடைமைப் பிரச்சாரத்தைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, சுயமரியாதைக் கொள்கையைப் பரப்புவது என்கிற முடிவுக்கு வந்தார். தோழர் ப.ஜீவானந்தம் போன்றவர்கள் பிரச்சினை செய்தார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல் இயக்கம் இருந்தால்தான் சுயமரியாதைப் பிரச்சாரமாவது செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.
இதுபற்றி 21.03.1935 ஆண்டு நடைபெற்ற தஞ்சை மாவட்டம் 5ஆவது சுயமரியாதை இயக்க மாநாட்டில் (திருத்துறைப்பூண்டியில்) தந்தை பெரியார் தெளிவுபடுத்தினார். அம் மாநாட்டில் தோழர்கள் ப. ஜீவானந்தம், முத்துசாமி, வல்லத்தரசு போன்றவர்கள் மாறுபட்டுப் பேசியிருந்த சூழ்நிலையில் அஞ்சாநெஞ்சன் கே.வி. அழகிரிசாமி தந்தை பெரியார் நிலையை ஆதரித்துப் பேசினார். தந்தை பெரியார் இறுதியாகத் தெளிவுபடுத்தினார்.
நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொது வுடைமைத் தத்துவத்தைச் சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மை தான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடன் அதை இன்னும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததும் உண்மைதான், ஆனால், சர்க்கார் பொதுவுடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து, நமது சுயமரியாதை இயக்கத்தையும் அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டுமென்று கருதியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு எனக்குப் புத்திசாலித்தனமாகச் சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மட்டும் வீரனாக ஆவதற்கு அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாக ஞாபகத்தில் வையுங்கள்.
சமதர்ம வளர்ச்சிக்குப் பிற பக்கங்களிலும் ஆள்கள் கிடைக்கலாம். ஜாதி ஒழிப்புக்குத் தன்மான இயக்கம் மட்டுமே போராடுவதால் இவ்வியக்கத்தைக் காப்பாற்றிப் பயன்படச் செய்வது இப்போதைக்கு முன்னுரிமை உடையதாகும் என்று விளக்கம் அளித்தார்.
என்றாலும் பொதுவுடைமைக் கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள் ‘குடி அரசில்’ வெளிவந்து கொண்டு தான் இருந்தன.
இந்தி எதிர்ப்பு
தன்மான இயக்கத்தின் வரலாற்றில் 1938இல் (ஏப்ரல் 21) சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து நடத்திய போராட்டம் மகத்தானது சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்திடவே இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று ஆணவமாக லயோலா – கல்லூரியில் அவர் பேசிய பேச்சு இந்தித்திணிப்பின் இரகசியத்தை வெளிப்படுத்தியது.
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்கும் போராட்டமாக அது உருவெடுத்தது. கட்சிகள், சமயங்கள் இவற்றையெல்லாம் கடந்த தமிழன் என்கிற ஓரினக் கோட்பாட்டை அதன்மூலம் தந்தை பெரியார் தலைமையில் தன்மான இயக்கம் உருவாக்கியது. பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளில் தமிழில் தனித் தன்மைகள் உருவாயின. நமஸ்காரம் வணக்கமானது – பிரசங்கம் சொற்பொழிவானது.
சமஸ்கிருதமயமாகிக் கிடந்த தமிழனின் பெயர்கள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்கிற உணர்ச்சியை ஊட்டியது. போராட்டத்தில் பெண்கள் குதிக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்தியதன் மூலம் பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வு ஓங்கி வளர்ந்தது!
நீதிக்கட்சியும் தன்மான இயக்கமும்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கிற நீதிக் கட்சி அரசியலில், ஆட்சியில் இருந்தது. தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் அரசியலுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் சமூக மறுமலர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
பார்ப்பனர் எதிர்ப்பு என்பதில் கூட, கல்வி, வேலை வாய்ப்புக் கண்ணோட்டத்தில்தான் நீதிக்கட்சிக்கு இருந்தது; சமுதாயத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த மேலாண்மையை எதிர்ப்பதிலோ, அந்த மேலாண்மைக்குக் காரணமாக இருக்கக்கூடிய மத இயலைக் கண்டிப்பதிலோ நீதிக் கட்சிக்குச் சரியான பார்வை இருந்ததில்லை. இந்த நிலையை தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
“திருவாரூர் மாகாண மாநாட்டில், பார்ப்பனரல்லாதாராகிய நாம் இந்துக்கள் அல்லர் என்றும், நாம் திராவிடர்கள் என்றும், நமது மதம் இந்து மதம் அல்ல என்றும் தீர்மானம் செய்தோம். இதை எதற்காகச் செய்தோம்? பார்ப்பனரிடமிருந்து நாடு, மதம் ஆகியவைகளில் பிரிந்தவர்கள் என்று காட்டுவதற்கேயல்லவா?
இதை எந்தப் பார்ப்பனரல்லாதாராவது, எந்த ஜஸ்டீசாராவது காரியத்தில் ஏற்று நடந்து கொள்ளு கிறார்களா? நாம் ஒரு சிலர் தொண்டை கிழிய, நம் குடும்பம் கெட, உடலழிய, ‘ஆரிய நாடு – திராவிட நாடு,’ ‘ஆரியர் திராவிடர்,’ ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்ல்லாதார்’ என்று கத்துவதும் சாகப் போவதுமாய் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் நம்மில் முக்கிய தலைவர் என்போர்களும், நாளை மந்திரி ஆகப் போகிறவர்களும், நிர்வாக சபை மெம்பர், மந்திரிகளின் காரியதரிசி, ஜில்லா போர்டு, முனிசிபாலிடி தலைவர் மற்றும் பட்டம், பதவி, சட்டசபை மெம்பர், உத்தியோகம் முதலாகியவை இந்தக் கட்சியின் பேரால் அடைந்தவர்களும், அடையப் போகிறவர்களும், அடையத் தவம் கிடப்பவர்களும் – ஆரியர்களுக்கு ஆக்கமளிக்கும் தேசம், மதம், கோயில், குளம், சட்டம், சாஸ்திரம், புராணம் இதிகாசம் ஆகியவைகளை ஏற்படுத்திக் கொண்டும், காப்பாற்றிக் கொண்டும், காப்பாற்றப் பிரச்சாரம் செய்துகொண்டும், அவைகளுக்கு அடிமைகளாக நடந்து தங்கள் செல்வங்களையும், அறிவுத் திறனையும், ஊக்கத்தையும் அவற்றிற்குச் செலவு செய்து கொண்டுமிருந்தால், நம் கட்சிக்கோ, நம் முயற்சிக்கோ ஏதாவது பயன் விளையுமா? என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்டவர்கள் ஒன்று, ‘இந்த மருந்து எங்களுக்கு ஜீரணம் ஆகாது; குடல் வெந்து போகும்; வேண்டாம்’ என்று அடியோடு இம்முயற்சிக் குழுவிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் அல்லது, ‘உன் வைத்தியம் எனக்குப் பிடிக்காது; நீ உன் அடைப்பத்தைக் கட்டிக் கொள்; வேறு வைத்தியனைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும், இல்லாமல், ‘நான் ஜஸ்டிஸ் கட்சி நான் பார்ப்பனரல்லாதார் கட்சி’ என்று சொல்லிக் கொண்டு இருந்தால் இதற்கு என்னதான் அர்த்தம் என்று கேட்கிறேன்” (வேலூரில் தந்தை பெரியார் உரை – திராவிட நாடு 20.06.1943)
இந்த நிலையில் நீதிக் கட்சி தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பின் காரணமாக சிறையில் இருந்தபோது அவர்தம் தலைமையின் கீழ் வந்து சேர்ந்தது.
சுயமரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் தனித்தனி அமைப்பாக இயங்காமல் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத்தை 1944 ஆகஸ்டு 27இல் சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் கூடிய மாநாட்டில் பெற்றது, பதவிகளை, பட்டங்களைத் துறக்க வேண்டும், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்பது போன்ற அடிப்படை மாற்றங்களை நோக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நீதிக்கட்சித் தலைவரான நிலையில் 1940, 1942 ஆகிய இரு ஆண்டுகளில் இருமுறை கவர்னர் ஜெனரல்களும், கவர்னர்களும் மாநிலத்தில் ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக் கொண்ட நிலையிலும் அதனை மறுத்துவிட்டார் தந்தை பெரியார். அதன்பின் இயக்கம் தேர்தலில் ஈடுபடுவதை தீர்மானம் மூலம் அகற்றிவிட்டார்.
அரசியலிலும், தேர்தலிலும் ஈடுபட்ட திராவிடர் அரசியல் கட்சிகள் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து தடம் புரண்டு, உருமாறிய காட்சிகளை தமிழ்ச் சமுதாயம் தன் கண்முன் பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டு தானே இருக்கிறது.
எந்த நோக்கத்துக்காக தன்மான இயக்கத்தையும், நீதிக் கட்சியையும் ஒன்றிணைத்து பதவிச் சேற்றில் சிக்காமல் தனித்தன்மையாகச் செயல்படும் ஒரு நிலையை உருவாக்கித் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்களோ, அந்த நிலையிலிருந்து துரும்பின் முனை அளவும் கூட மாறுபடாமல் பாடுபட்டு வருவது திராவிடர் கழகம்தான். நீதிக்கட்சி என்று தனியாக ஒன்று இல்லை; சுயமரியாதை இயக்கம் என்றும் தனியாக இல்லை; இரண்டும் ஒன்றானதுதான் இன்றைய திராவிடர் கழகம்.
வரலாற்றுக் கணக்கீட்டின்படி தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா ஆண்டு இது.
இந்தக் கால கட்டத்தில் அரிமா நோக்காகக் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம் – கடக்க வேண்டிய தூரத்தை எவ்வித சபலங்களுக்கும், திசை திருப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல் கடந்து தந்தை பெரியார் காண விரும்பிய இலட்சிய சமுதாயத்தைப் படைப்போம்!
21ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே என்பதை ஆக்கிக் காட்டுவோம்!
இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதி சங்கரர் சங்கர மடங்களை உருவாக்கி இந்து மதத்துக்குப் புது வாழ்வு அளித்தார் என்றால், தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் சீரிய தலைமையில் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பெரியார் மய்யம் உருவாக்கி தந்தை பெரியாரின் தத்துவங்களை கடை கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்ப்போம்!
வாழ்க பெரியார்!
– முற்றும்