புதுடில்லி, ஜன.9 ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது’ என்று நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.சவுத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (8.1.2025) நடந்தது.
இதில், குழுவில் உள்ள காங் கிரசின் பிரியங்கா காந்தி, திமுகவின் பி.வில்சன், செல்வகணபதி, அய்க்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, சிவசேனாவின் சிறீகாந்த் ஷிண்டே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா, மணீஷ் திவாரி உள்ளிட்டோரும் பங்கேற் றனர்.
கூட்டத்தில், இந்த மசோதா நாட்டின் நலனுக்கானது என பாஜ உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குழு உறுப்பினர்கள் பி.வில்சன், செல்வகணபதி ஆகி யோர், குழு தலைவர் சவுத்ரியிடம் திமுக தரப்பில் கடிதம் கொடுத்தனர். அதில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது. திமுக உறுதியாக கருதுகிறது. எனவே இந்த மசோதா தொடர்பாக நாடு முழுவதும் விரிவான முறையில் கருத்து கேட்க வேண்டியது அவசியம். அதேப்போன்று அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக்களை பெற வேண்டும். அதுகுறித்த போதிய அவகாசங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த எந்த அடிப்படையில் மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரை வழங்கியது என்பது புரியவில்லை. எனவே அதனை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் வழங்க வேண்டும்’’ என்று வலி யுறுத்தினர்.