புதுடில்லி, ஜன. 9- தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். குஜராத்தில் உள்ள காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 2023இல் மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 86 வயதாகும் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
மனு தள்ளுபடி
இந்நிலையில், தனது உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாகவும், வேகமாக மோசமடைந்து வருவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் ஆசாரம் பாபு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பான அவரது மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆசாராம் பாபு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் தேவதத் காமத், ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உயிர் பிழைத்தவரின் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்த வழக்கில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பது அவசியம் என்று வாதிட்டார். இதனை அடுத்து நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாக கூறினர்.
இதே போல் அரியானா தேர்தலின் போதும் பல்வேறு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தின் மூலமாகவும் அரியானா பாஜக அரசின் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலமாகவும் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை சாமியார் ராம் ரஹீமிற்கு தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போதும், அரியானா சட்டமன்ற தேர்தலின் போதும் சாமியார் ஆசாராம் மற்றும் சாமியார் ராம் ரஹீம் இருவருக்குமே ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.