மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தி இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வரும் நோக்கில் அங்கு அரசு இன்டர்நெட்டை முடக்கியது. இந்நிலையில், மாநிலத்தில் இணையதளம் மீதான தடையை தளர்த்தி மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஒருவராக இருந்த சசி தரூர் கூறும்போது “எந்தவொரு இடத்திலும் வன்முறை அல்லது பயங்கரவாதத்தை தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; இணைய இயக்கம் உண்மையில் எந்த வகையிலும் தடையாக இருப்பதை நிரூபிக்கும் எந்தவொரு நியாயமும் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை; வன் முறையில் குறிப்பிடத்தக்க தாக்கம் இல்லை. சாதாரண குடிமக்களுக்கு கணிசமான துயரத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு இணையத்தை முடக்குவதை வழக்கமாகக் கொண்ட உலகின் ஒரே ஜனநாயக நாடு இந்தியா என்பது வினோதமானது” என்று கூறினார். தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் இணையப் பயன்பாடு வந்துவிட்டது,
உடல் நிலை சரியில்லையா, ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை, ஆன்லைனில் மாத்திரை – மருந்தா, மாலையில் தாமதமாக வீடு சென்றோமா? உணவு சமைக்க நேரம் இல்லையா, இணையத்தின் மூலம் சாப்பாடு வாங்கலாம். இதற்கு வங்கி, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், கைப்பேசி பரிவர்த் தனை போன்றவைகளோடு வீட்டில் ஆய்வுமாணவர்கள் தங்களின் முழுமையான கல்வியை இணையத்தில் தான் கற்கின்றனர். கல்வியில் இணையத்தின் பங்கு 43 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் இதர கல்வி வேலைவாய்ப்புகள் தொடர்பான பதிவுகள், தேர்வுகள் மற்றும் அனைத்து வகையான முக்கிய தகவல்களையும் பெற இணையத்தை பயன்படுத்தும் குடிமக்கள் மீது இந்த அரசு இணையத்தடை என்ற ஒன்றைப் பயன்படுத்தி அவர்களை பட்டினியால் சாகும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது பிரிவை நீக்கி உத்தரவிட்டது. அதற்கு முன்பு அம்மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொலைப்பேசி சேவை, இணையதளம் என அத்தனையையும் முடக்கி வைத்தது, 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது இன்றும் அங்கு சரியான இணையதளம் மற்றும் தொலைப்பேசி சேவை செயல்படவில்லை, அய்ந்து ஆண்டுகள் கடந்தும் அரசால் அங்கு இணையதள சேவையை பழைய நிலைமையைப் போன்று வழங்க முடியவில்லை.
ஆகஸ்ட் 4, 2019 முதல் மார்ச் 4, 2020 வரை 213 நாட் களுக்கு நீடித்த இணையத் தடை இணைய வரலாற்றில் இதுவே மிக நீண்ட இணைய முடக்கம் ஆகும்.
4 ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 27, 2019 வரை 145 நாள்களுக்கு இந்தியாவில் இணைய முடக்கம் நடந்தது; இது இரண்டாவது மிகவும் நீண்ட கால இணையத்தடை ஆகும். மூன்றாவது மிக நீண்ட இணைய சேவை முடக்கத்தை டார்ஜிலிங்கில் நிகழ்த்திக் காட்டினார்கள்
இந்த அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிறது, ஆனால் இணைய முடக்கம், தொலைப்பேசி சேவை முடக்கம் போன்றவற்றை தாராளமாக செய்துவருகிறது மக்களின் கல்வி, சுகாதாரம், வணிகம் மற்றும் கருத்து வெளிப்பாட்டிற்கான அடிப்படை உரிமைகளின் குரல் வளை நெரிக்கப்பட்டு விட்டது.
இணையம் என்பது ஒரு தகவல்தொடர்பு அமைப்பு மட்டுமல்ல, வணிக – மின்-வணிக, மின்-ஆளுமை திட்டங் களுக்கான ஒரு தேர்வுத் தளமாகும், மேலும் பல விடயங்களில் ஆராய்ச்சி மற்றும் தகவல்களுக்கான தளமுமாகும். இதன் விளைவாக இணையத்தை முழுமையாக நிறுத்துவது அந்தப் பகுதியின் அனைத்து மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆபத்தையோ அல்லது தொல்லையையோ ஏற்படுத்துவதில் எந்தப் பங்கும் இல்லாத அப்பாவி மக்கள் மீது பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்துகிறது, மற்றும் இந்திய அரசமைப்பின் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுகிறது. மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கருத்துச்சுதந்திரத்தை முடக்குவதுதான் ஜனநாயகம் என்று ஆகிவிட்டது.
இந்தக் கொடுமைகளை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிக்கப் போகிறோம்?
வெளிநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முழக்கம், அடேயப்பா, இந்தியா போன்ற ஜனநாயக – கருத்துச் சுதந்திரமுள்ள நாட்டை உலகில் எங்கும் காண முடியாது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால், இந்தியாவில் நடப்பதோ அதற்கு நேர்மாறானது! 2024 மக்களவைத் தேர்தல் மூலம்தான் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.