சென்னை,ஜன.8- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-
சென்னை ஜவஹர் லால் நேரு உள் விளை யாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பன்னாட்டு, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகள் வழங்கும் விழா தமிழ்நாடு துணை முதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (7.1.2025) நடைபெற்றது.
ஊக்கத் தொகை
இவ்விழாவில் காமன்வெல்த் வாள்வீச்சு மற்றும் சதுரங்க (செஸ்)போட்டி, ஆசிய அளவிலான தடகளம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், நீச்சல் போட்டி, ஆசிய மற்றும் பன்னாட்டு ஸ்குவாஷ், பாரா பாட்மிண்டன் போட்டிகள், இன்டர் நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற செஸ் வீரர்கள், தேசிய அளவிலான தடகளம், நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, ரோலர் ஸ்கேட்டிங், வூஷு, சாப்ட் டென்னீஸ், சைக்கிளிங், பளுதூக்குதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பாரா தட களம், பாரா நீச்சல், பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் மற்றும் தேசிய பள்ளிக் குழுமப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் என மொத்தம் 1,021 வீரர், வீராங் கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 26.69 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
காமன்வெல்த் விளை யாட்டு போட்டிகள், ஆசிய தடகளப் போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, தேசிய பள்ளிக் குழுமப் போட்டி உள்ளிட்ட பன்னாட்டு, ஆசிய மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள், உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் வீரர், வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் மைல்கல்லாக, மிகப் பெரிய எழுச்சியாக போற்றப்படுகின்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திராவிட மாடல் அரசு பதவியேற்றதிலிருந்து (7.5.2021 முதல்) இதுநாள் வரை பன்னாட்டு, ஆசிய, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதங்கங்கள் வென்ற 4,352 வீரர், வீராங்கனைகளுக்கு 143.85 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.