தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் அறிக்கை
மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விவரத்தில் 2018 முதல் நியமிக்கப்பட்ட 684 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், 21 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் (3%), 14 பேர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் (2%) மற்றும் 82 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் (11.9%) என்பதும், எஞ்சிய 567 பேர் (82.53%) முன்னேறிய வகுப்பை சார்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் அறியப்பட்ட பின்பு, கடந்த 22.12.2024 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் “உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து பிரிவினருக்கும் தகுந்த விகிதாச்சார அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு சமூக நீதியை உறுதிப்படுத்திடப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளோம்.
ஆனால், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு பரிந்துரைக்க உள்ள நீதிபதிகளில் நான்கு பேர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், தற்பொழுது பன்னிரெண்டு பார்ப்பன சமூகத்தை சார்ந்த நீதிபதிகள் இருப்பதாகவும் தெரியவரும் நிலையில், தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் இல்லாத பல சமுதாயங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மையினர் சமுதாய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லா நிலை ஏற்பட்டு, மற்ற சமூக மக்களை சார்ந்த வழக்குரைஞர்கள் நீதிபதிகளாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்களாக மக்கள் மத்தியில் தாழ்வான பார்வையை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், பிரதிநிதித்துவம் இல்லாத, சரியான பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமூக வழக்குரைஞர்களை தேர்வு செய்து நீதித்துறையில் சமூக நீதியை நிலைநாட்டிட வேண்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தினை கேட்டுக்கொள்கிறது.
நன்றி!
– கே.பன்னீர்செல்வன்
பொது செயலாளர்