சென்னை, ஜன.7 சட்டமன்றத்தில் இன்று (7.1.2025) மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நேற்று (6.1.2025) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்ததும் நேற்றைய கூட்டம் முடிந்தது.
மீண்டும் இன்று (7.1.2025) காலை 9.30 மணியளவில் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர் ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து இந்திய மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவரின் சிறந்த பணிகள் குறித்து இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் மு. அப்பாவு படித்தார். பின்னர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
அதே போன்று சட்டமன்ற பேரவை உறுப்பினரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை படித்ததும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணி துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அவை நிகழ்வு முடிந்ததாக பேரவை தலைவர் மு. அப்பாவு அறிவித்தார். மீண்டும் பேரவை நாளை (8.1.2025) காலை கூடும் என்றார்.