சென்னை,ஜன.7- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும்.
அந்த வகையில், நேற்று (6.1.2025) கூடிய சட்டபேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இதற்காக சட்டப் பேரவைக்கு வருகை
தந்த ஆளுநர்
ஆர்.என்.ரவிக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நாட்டுப் பண் பாட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டப் பேரவைpயல் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், “சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் உள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.