‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!’’
முழக்கம் நாடு முழுவதும் ஒருமித்து எழுப்பப்படவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
தஞ்சை, ஜன.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!’’ என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒருமித்து எழுப்பப்படவேண்டும் என்று செய்தி யாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
நேற்று (6.1.2025) தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநரின் இன்றைய செயல்பாடு எப்படி இருக்கிறது?
அரசமைப்புச் சட்டத்தை அளவற்ற முறையில் மீறிக் கொண்டிருக்கிறார்!
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டு ஆளுநர் திட்டமிட்டு, அதன் பின்னால் ஓர் அரசியல் தூண்டுதலும் இருக்கிறது என்று அய்யப்படும் அளவுக்கு, ஒவ்வொரு முறையும் அரசமைப்புச் சட்டத்தை அளவற்று மீறிக் கொண்டிருக்கிறார்.
அவர் பதவிப் பிரமாணம் எடுத்ததற்கு நேர் விரோதமாக நடக்கின்றார். இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஒருபுறம் 75 ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டு, இன்னொரு பக்கம் அந்த அரசமைப்புச் சட்டத்தை உடைக்கக் கூடியவர்களையே உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துவதுபோல, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் சென்ற முறையும், படிக்காமல், உரையில் இல்லா ததையெல்லாம் படித்தார்.
பொருந்தாத காரணத்தைச் சொல்லும் ஆளுநர்!
இந்த முறையும், அந்த உரையை அறவே புறக்கணிக்கின்ற வகையில், சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
திருந்தாதவகையில், அதற்கு ஒரு பொருந்தா காரணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
கடமை தவறியவர் என்ற காரணத்திற்காக, இந்த ஆளுநர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்.
பதவி நீக்கம்
ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசமைப்புச் சட்டத்தை சரியாகப் பயன்படுத்துகின்ற ஓர் அரசாக இருந்தால், குடியரசுத் தலைவரால் தமிழ்நாடு ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
பதவியின் மாண்புக்கு ஓர் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். Dereliction of Duty என்ற கடமையாற்றுவதிலிருந்து விலகி, மக்கள் நலத்தைப் புறக்கணிக்கிறார். அதனை விரிவாகவும், விளக்கமாகவும் இன்றைய பொதுக்கூட்டத்தில் சொல்வேன்.
அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு’’ என்ற முழக்கம்!
எனவேதான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசை நடத்திக் கொண்டு, குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கக் கூடிய ‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!’’ என்ற முழக்கத்தை, எல்லாக் கட்சிக்காரர்களும், யார் யாருக்கெல்லாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதோ, யார் யாரெல்லாம் அரசமைப்புச் சட்டப்படி நடக்கவேண்டும், நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் அத்துணைப் பேரும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
முதல் குரல் இங்கிருந்து!
எனவே, அதனுடைய முதல் குரல், இன்று நடைபெறும் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டத்திலிருந்து தொடங்கும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.