கருநாடக மாநிலம் ராமநகரா என்ற ஊரில், ‘பேய்’கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாம். ஆகையால், பைரவர் என்ற கடவுளின் வாகனமான நாயின் சிலை செய்து, அதை வணங்கி வந்தால், ‘பேய்‘கள் நடமாட்டம் இருக்காது என்று யாரோ ஜோசியக்காரன் கூற, ஊரார் வீட்டுக்கு வீடு பணம் வசூலித்து நாய்களுக்குக் கோவில் கட்டி உள்ளனர்.
பொதுவாக இறந்துபோன செல்லப் பிராணிகளுக்கு அவற்றின் நினைவாக சிலர் சிலை வைப்பார்கள்.
ஆனால், இல்லாத ‘பேய்’க்குப் பயந்து, நாய் சிலை வைத்து கோவிலாகக் கட்டியுள்ளனர் கருநாடகத்தில் உள்ள ஊர் மக்கள்.
எப்படி இருக்கிறது?
நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்கள், மூன்று ‘பேய்’கள்பற்றி தந்தை பெரியார் கூறினார்.
அந்த மூன்று ‘பேய்’களில் கடவுள், ஜாதி, மதம் என்பவை அடங்கும். (வாழப்பாடி பொதுக்கூட்டத்தி்ல, 19.5.1962).
அதாவது, இல்லாததை இருப்பதாகக் கூறுவது, ‘கடவுள்’ என்ற ஒன்று இல்லை என்பது எப்படிக் கெட்டியான உண்மையோ, ‘பேய்‘ என்பதும் அத்தகையதே!
பேயைக் கண்டவன் யார்? கடவுள்பற்றி சொல்வதுபோல ‘‘கண்டவன் விண்டதில்லை; விண்டவன் கண்டதில்லை’’ என்பது ‘பேய்’க்கும் பொருந்தும்.
முன்பு எல்லாம் இருட்டாக இருக்கும் இடத்தில் எல்லாம் ‘பேய்’ நடமாட்டாம் என்பார்கள்; அதுபோன்ற இடங்களில், அச்சத்திலிருந்து விடுபட, உரக்கப் பாட்டுப்பாடிக் கொண்டு செல்வது உண்டு.
இப்போது எங்கும் மின் விளக்கு வெளிச்சம் வெள்ளம்போல் பாயும் காலகட்டத்தில், ‘பேய்’ நடமாட்டப் பேச்செல்லாம் போயே போயிடுச்சு.
மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் கூறுவார், ‘‘பேயைவிட, பேய்ப் பிடித்ததாகக் கூறப்படுபவன் அதிகம் ஆடுவான்’’ என்று.
இந்தப் ‘பேய்’ விடயத்திலும், சாமி ஆடுவதிலும்கூட ஜாதி உண்டு.
எந்தப் பார்ப்பானும், பார்ப்பனப் பெண்ணும் ‘பேய்’ பிடித்து ஆடுவதில்லை; சாமி வந்து ஆடுவதில்லை. இந்தக் கடவுள்களின் யோக்கியதைதான் என்ன?
எலி, நாய் எல்லாம் கடவுளின் வாகனங்களாம்! ஒரு கேள்வி, கடவுளின் வாகனமான நாய்க்கு வெறி பிடிப்பது ஏன்? கடவுள், மத நம்பிக்கை வெறி தொலைந்தால்தான் மனிதன் உருப்படுவான்!
– மயிலாடன்