மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை
வழங்கி பெரியார் வீரவிளையாட்டுக் கழக புரவலர் வீ.அன்புராஜ் பேச்சு
சென்னை, ஜன. 6- செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடத்தின் சார்பாக நான்காம் ஆண்டு மாநில அளவிலான 2025 ஆம் ஆண்டுக்கான செந்தமிழ் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை பரங்கி மலையில் உள்ள மான்போர்ட் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
சிலம்ப போட்டி
செந்தமிழ் வீரச் சிலம்ப கலைக் கூடத்தில் தொழில்நுட்ப இயக்குநர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, தொடு முறை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
செந்தமிழ் வீரச் சிலம்ப கலைக் கூடத்தின் தலைவர் சங்கர் ராமசாமி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் களாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெரியார் வீர விளையாட்டு கழகத்தின் புரவலர் வீ.அன்புராஜ் , தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் அ.சற்குணம் மற்றும் இன்டெக்ஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் மேலாண்மை இயக்குநர் ம.சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
புரவலர் வீ.அன்புராஜ்
நிகழ்ச்சியில் பேசிய பெரியார் வீர விளையாட்டு கழக புரவலர் வீ.அன்புராஜ் உரையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1600 க்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து போட்டிகளை நடத்துவது மிகவும் சவாலான ஒன்றாகும், அதனை சிறந்த முறையில் நடத்திய செந்தமிழ் வீரச் சிலம்ப கலைக்கூடத்தின் நிர்வாகிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், கலந்துக்கொண்ட மாணவர்கள்அனைவரும் பரிசுப்பெற்று செல்வதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் சிலம்பப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகவும், விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதிலும் , வளர்ச்சி பாதையில் எடுத்து செல்வதிலும் திராவிடமாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த திராவிட மாடல் அரசு செய்யவில்லை என்றால் வேற எந்த அரசால் செய்ய முடியும் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்படுகின்றனர்.
சமூக அக்கறை
செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக் கூடத்தின் நிர்வாகிகள் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பத்தை மீட்டெடுப் பதிலில் எவ்வளவு முனைப்போடு செயல்படுகிறார்களோ, அதே ஆர்வத் தோடும் சமூக அக்கறையோடும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை குறிப்பாக கரோனா மற்றும் புயல் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள், எழை மாணவர்களுக்கு படிப்பதற்கான நிதியுதவி, அரசுப்பள்ளிகளுக்கான அடிப்படைவசதிகள் என அவர்களின் செயல்கள் விரிந்துக்கொண்டே செல்வது மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது . மற்றவர்களுக்கும் இதுபோன்ற சிறந்த செயல்கள் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இவர்களின் பணிகள், நோக்கங்கள் மேலும் சிறக்க வாழ்த்துவதாக கூறினார்.
கலந்துகொண்டோர்
இந்த நிகழ்ச்சியில், மாநில பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், கு.அய்யாதுரை, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், பொறியாளர் பாலா கன்ஸ்ட்ரக்சன் பாலகிருஷ்ணன், புலவர் இரா.மோகன்தாஸ், ரெ.யுவராஜ், கோவிந்தராஜ்,நிகேஷ்குமார், மாதவன், இளங்கோவன், நேரு, ஊடகவியலாளர் தீலிபன், பிரபு, கண்ணன்,செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடத்தின் பொதுச் செயலாளர் மோகன் அறிவானந்தம், நிர்வாக செயலாளர் சிவனேசன், துணைத் தலைவர் ஆனந்த் குமார், பொருளாளர் சிறீதேவி மற்றும் பல்வேறு சிலம்ப கலைக்கூடங்களை சார்ந்த ஆசான்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நிவன் ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.