மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தனது அதிகாரப்பூர்வ குடியிருப்பில் இருந்த அனுமான் கோயிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்குரைஞர்கள் சங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தச் செயல் ஸநாதன தர்மத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.
வழக்குரைஞர்கள் சங்கம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் இருந்து கோவிலை அகற்றியதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
மாநிலத்தின் வழக்குரைஞர் சங்கம் இந்த நடவடிக்கை ஸநாதன தர்ம நம்பிக்கையாளர்களுக்கு அவமானமாக இருப்பதாகவும், அந்த வீடு தலைமை நீதிபதியின் தனிப்பட்ட சொத்து அல்ல எனவும் கூறியுள்ளது.
வழக்குரைஞர்கள் சங்கம், டிசம்பர் 23 அன்று இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிற்கு எழுதிய கடிதத்தில், நீதிபதி கைட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நீதிபதியின் இல்லத்தில் உள்ள அனுமார் கோயிலை இடிப்பது ஸனாதன தர்ம நம்பிக்கையாளர்களுக்கு அவமானம் என்று குற்றஞ் சாட்டியுள்ளது.
முந்தைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கோவிலுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்றும் அந்த குழு கூறியது.
அதிகாரப்பூர்வ குடியிருப்பானது அரசுக்குச் சொந்தமானது மற்றும் கோவிலின் பராமரிப்பு அரசு பணத்தால் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினர். ‘ஸநாதன தர்மத்தை நம்பும் தலைமை நீதிபதி மற்றும் பணியாளர்கள் பெரும்பாலானோர் பங்களாவில் வசித்து வந்ததால், அவர்கள் தங்கள் மத வழிபாட்டிற்குத் தொலைவான இடத்திற்குச் சென்று நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை என்பதால், அந்தக் கோவில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக, அமைதியானதாகவும் அழகாகவும் மாற்றுவதற்கு மிகவும் முக்கியமானது’’ என்று தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கைட் புத்த மதத்தைக் கடைப்பிடிக்கிறார், அதனால் தான் அவர் ஹிந்துமதக் கடவுள்களை மதிக்காத நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வழக்குரைஞர் சங்கத் தலைவர் கூறுகிறார்.
‘‘நீதிபதி புத்த மதத்தைப் பின்பற்றுவது நல்லதே’’ எனக் கூறிய அவர் ‘‘அதற்கு எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் இந்த மாதிரியான கோவிலை அகற்றுவது சரியானது அல்ல என்று குறிப்பிட்டதோடு, வேறு ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளனர். காவல் நிலையங்களில் இருந்து அனைத்துக் கோவில்களையும் அகற்ற வேண்டுமென்று மத்தியப் பிரதேச வழக்குரைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் வழக்குரைஞர் சங்கம் எச்சரித்துள்ளது.
கோவில்களை அகற்ற வேண்டும் என்ற வழக்கு நீதிபதி சுரேஷ் கைட்டின் கீழ் விசாரணைக்கு வருகிறது. ஆகவே கைட் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்றும் அக்கடிதத்தில் எழுதி உள்ளனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியப் பிரதேச தலைமை நீதிபதி பதவிக்கு டில்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சுரேஷ்குமார் கைட்டை கொலிஜியம் குழு பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் சுரேஷ் கைட் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் ெகாண்டார்.
நீதிபதிகள் குடியிருப்பில் அனுமார் கோயிலைக் கட்டியதே தவறு. இந்த நிலையில் நீதிபதி அந்தக் கோயிலை அகற்றியதில் என்ன தவறு இருக்க முடியும்? நீதிமன்றம் மதச் சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டாமா?
காவல் நிலையத்தில் உள்ள கோயில்கள் அகற்றப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது சட்டப்படி சரியானது தானே – அதன்பின் விளைவுகள் குறித்து வழக்குரைஞர்கள் சங்கம் மிரட்டுவது அசல் வன்முறையே!
சட்ட விரோத கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2010ஆம் ஆண்டிலேயே தீர்ப்பு வழங்கியிருப்பதையும் நினைவூட்டுகிறோம்.