சென்னை, ஜன.2- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்களில் ‘ஸ்டாண்ட் அப் காமெடி” என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் நேருவை மிக மிக இழிவாக தரக்குறைவான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பட்ட பண்டித நேருவை இத்தகைய முறையில் இழிவாக பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது.
கைது செய்ய வேண்டும்
இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பண்டித நேருவை தரம் தாழ்ந்து இழிவாக பேசிய பரத் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் மகத்தான மனிதராக கருதப்பட்ட பண்டித நேருவை பழித்து பேசியவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகைய அவதூறு பேச்சுக்கள் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் மனதை புண்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இதுபோன்ற நாகரீகமற்ற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்த சைபர் கிரைம் பிரிவினருக்கு இருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.