டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தொல்லியல் அறிஞர்கள் மனு

Viduthalai
2 Min Read

மதுரை, டிச.29- டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டுமெனக் கூறி மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கல்வெட்டு
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சுவடுகளை கொண்டது. இது ஒரு தொன்மையான சமணத்தலம். இங்கு கிபி 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை சிவன் கோயில் உள்ளது. இங்கு அரிய லகுலீசர் சிற்பம் ஒன்றும் குடைவிக்கப்பட்டுள்ளது. இங்கு கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு மூலம் இவ்வூர் அக்காலத்தில் பெரும் வணிகத்தலமாக இருந்தது வெளிப்படுகிறது.
இவ்வூரின் காவல் முக்கியத்துவம், ராணுவ நடவடிக்கை போன்ற செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிட்டாபட்டிக்கு சுமார் 5 கிமீ தொலைவிலேயே மாங்குளம் என்னும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது.

அனுமதிக்கக் கூடாது
இத்தகைய வரலாற்று முக்கியத்துவமும், பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாபட்டியில் ஒன்றிய அரசு டங்ஸ்டன் இழை சுரங்கம் அமைக்கும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒருபுறம் வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பல கோடிகளை செலவழிக்கும் ஒன்றிய அரசு, வளர்ச்சி என்ற பெயரில் இத்தகைய வரலாற்று சின்னங்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், பாதுகாக்க வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழியக்கூடிய ஆபத்தான முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம். முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது. இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

வேலை கேட்ட இளைஞர்கள் மீது தடியடி:
கொடுமையின் உச்சம்!
பிரியங்கா கண்டனம்
புதுடில்லி,டிச.29- பீகார் மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி நடந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வு முறைகேட்டை கண்டித்து பாட்னாவில் 26.12.2024 அன்று இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். வேலை தேடுபவர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளரும், மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது கொடுமையின் உச்சமாகும். பாஜ ஆட்சியில் வேலைவாய்ப்பு கோரிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுகின்றது. உத்தரப்பிரதேசமாக இருந்தாலும் சரி, பீகார் அல்லது மத்தியப்பிரதேசமாக இருந்தாலும் இளைஞர்கள் குரல் எழுப்பினால் அவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *