கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நடக்கின்ற உரிமை பெறும்வரை என்னுடைய வைக்கம் போராட்டத்தினைத் தொடருவேன்’’ – தந்தை பெரியார்!
வைக்கம் உணர்வு என்பது, நம்முடைய நாடி, நரம்புகளையெல்லாம் முறுக்கிக் காட்டக்கூடியது- உயர்த்திக் காட்டக் கூடியது!

கோவை, டிச.29 வைக்கம் உணர்வு என்பது, நம்முடைய நாடி, நரம்புகளையெல்லாம் முறுக்கிக் காட்டக்கூடியது; உயர்த்திக் காட்டக் கூடியது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நடக்கின்ற உரிமை பெறும்வரை என்னுடைய போராட்டத்தினைத் தொடருவேன்! ‘‘நான் எவரையும் தாழ்த்தமாட்டேன்; என்னை எவரும், தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன், தொடக்கூடாதவன், நெருங்கக்கூடாதவன், படிக்கக்கூடாதவன் என்று சொன்னால், அதற்குரிய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு எந்த விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்’’ என்று தான், தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

தந்தை பெரியார்
51 ஆவது நினைவு நாள்
கடந்த 26.12.2024 அன்று மாலை கோவையில் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்‘’ – தமிழ்நாடு,கேரள மாநில முதல மைச்சர்களுக்கு நன்றி – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்பு ரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடை பெறுகிறது. வழக்குரைஞராக உள்ள அவர் நீதி மன்றத்திற்குச் செல்லவேண்டும். அப்படி அவர் சென்ற நேரத்தில், அந்தத் தெரு வழியாகச் சென்றபோது, உயர்ஜாதிக்காரர்கள், நம்பூதிரிகள் எல்லாம் சேர்ந்து அவரை அடித்து, உதைத்து, ‘‘நீ கீழ்ஜாதிக்காரனாயிற்றே, எப்படி இந்தத் தெருவுக்குள் வருகிறாய்? உனக்கு இந்தத் தெருவில் நடப்பதற்கு உரிமையில்லையே! நீ வந்ததினால், தீட்டாகிவிட்டதே” என்று சொல்கிறார்கள்.
அந்தப் பிரச்சினையிலிருந்து வெடித்ததுதான் வைக்கம் போராட்டம்.

நாய், பன்றி, கழுதை நடக்கலாம்; ஆறறிவு படைத்த மனிதன் நடக்கக் கூடாதா?
பெரியார் அவர்கள், காந்தியாருக்கு எழுதிய கடிதத்தில்,
‘‘அந்தத் தெருக்கள் உள்ள இடத்திற்கு நான் சென்று பார்த்தேன் மகாத்மா அவர்களே, அந்தத் தெருவில் நாய் போகிறது, பன்றி போகிறது, கழுதை நடக்கிறது; ஆனால், ஆறறிவு படைத்த மனிதன், என் சகோதரன் நடக்கக்கூடாதா?” என்று கேட்டார்.
மனிதத்திற்காக, மனித உரிமைக்காக, மனித சமத்து வத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் போர்க்கொடி உயர்த்தி, தொடர்ந்து வைக்கம் போராட்டத்தை நடத்தினார். பெரியாரை கைது செய்கிறார்கள்.
ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு வந்த வெற்றி! வைக்கம் உணர்வு என்றால், அது எப்படிப்பட்டது என்பதை நாம் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

நம்முடைய நாடி, நரம்புகளையெல்லாம் முறுக்கிக் காட்டக்கூடியது;
உயர்த்திக் காட்டக் கூடியது!
வைக்கம் உணர்வு என்பது, அது நம்முடைய நாடி, நரம்புகளையெல்லாம் முறுக்கிக் காட்டக்கூடியது; உயர்த்திக் காட்டக் கூடியது.
‘‘நான் எவரையும் தாழ்த்தமாட்டேன்; என்னை எவரும், தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன், தொடக்கூடாதவன், நெருங்கக்கூடாதவன், படிக்கக்கூடாதவன் என்று சொன்னால், அதற்குரிய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு எந்த விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று தான், தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், உடனடியாக வைக்கம் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டினார்கள். அந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவிற்கு நடந்தது.

பெரியார் வந்திருக்காவிட்டால்….
அந்தப் போராட்டம் குறித்து ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஓர் ஆய்வாளர், 15 ஆண்டு காலம் உழைத்து, வைக்கம் போராட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார். அதிலே, கேரளத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சொல்லுகிறார். ‘‘பெரியார் வந்தி ருக்காவிட்டால், பெரியார் அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்காவிட்டால், அந்தத் தெருவில் நடக்கும் உரிமை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்குக் கிடைத்திருக்காது. வரலாற்றிலே அந்த நிகழ்வு இடம்பெற்றிருக்க முடியாது” என்று சொல்கிறார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, வைக்கம் போராட்டத்தினுடைய தனிச் சிறப்பு என்னவென்றால், இன்றைக்கும் வருணாசிரமப் பாம்பு படமெடுத்தாடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு ரூபத்திலே அது உலா வந்து கொண்டி ருக்கின்றது.
பெரியார் நமக்கு வழிகாட்டினார் – காமராஜர் ஆட்சிக்கு வந்து, நம்மைக் காப்பாற்றினார்!
குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க, 50 ஆண்டு களுக்கு முன்பு போராடினோம், பெரியார் நமக்கு வழிகாட்டி நின்றார். அன்றைக்குக் காமராஜர் ஆட்சிக்கு வந்து, நம்மைக் காப்பாற்றினார்.
இன்றைக்குப் போராட்டங்களில் நியாயங்களை வெல்வதற்கு ஏற்ற அளவுக்குக் கட்சிகளில்லை என்பதை அழகாகச் சொன்னார் எழுச்சித் தமிழர் அவர்கள்.

உரிமைக்கென்று ஒலிக்கும்
போர்க்குரல்!
திராவிட அரசியல் என்பது ஒரு கட்சியைச் சார்ந்த தல்ல. திராவிட இயக்கம் என்பது மனித உரிமை. திராவிடம் என்பது வெறும் இடத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களையோ, ஒரு குறிப்பிட்ட மொழியையோ மட்டும் குறிப்பதல்ல. அதையும் தாண்டி, மானிடப் பரப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ, எங்கெல்லாம் பிறப்பினால் பேதம் இருக்கிறதோ, எங்கெல்லாம் தொடாதே, நெருங்காதே, பார்க்காதே, நீ கருப்பு, நான் வெள்ளை என்று சொல்வதையெல்லாம் எதிர்த்துப் போராடுகின்ற வைக்கம் போராட்ட உணர்வு இருக்கிறதோ, அதுவே திராவிடம். உரிமைக்கென்று ஒலிக்கும் போர்க்குரலாகும்.
அன்றைக்கு நடந்த அந்தப் போராட்டம் படிப்படியாக வளர்ந்தது, எந்த அளவிற்கு வந்தது? அருமைத் தோழர் எழுச்சித் தமிழர் அதை அழகாகச் சொன்னார்.
வைக்கத்தில்கூட தெருவில் நடந்து, பிறகு கோவிலுக்குள் நுழையலாம் என்று அதில்கூட ஒரு எல்லைக்கோடு போட்டார்கள்.

நம் இனத்திற்கு இருக்கின்ற
மிகப்பெரிய கறை!
அர்த்த மண்டபமா? இன்னுங்கூட அந்த ஜாதிப் பாம்பு தலையை நீட்டுகிறது.
சிறீவில்லிபுத்தூரில் தலையை நீட்டுகிறது; அவமானப்பட்ட நம்மாளே, அந்தத் தகவலை மறைத்து, வெளியில் சொல்ல முடியாமல் இருக்கிறார் என்பதுதான், நம் இனத்திற்கு இருக்கின்ற மிகப்பெரிய கறையாகும்.
இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியிலேகூட அத னைச் செய்து பார்க்கலாம் என்று அவர்களுக்குத் தைரியம் இருக்கும்போது, அதற்குத்தான் கைத்தடி வைத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். அதற்காகத்தான் அவருக்குக் கைத்தடி கொடுக்கப்பட்டது.
திருந்திவிட்டது, மாறிவிட்டது என்று நினைத்தால், நாம்தான் ஏமாளி!
ஏனென்றால், பாம்புக்குப் பால் ஊற்றினாலும்கூட, அது எப்போதும் தன்னுடைய விஷத்தன்மையிலிருந்து மாறாது; வேண்டுமானால், தோலை உரிக்குமே தவிர, அதனுடைய விஷத்தன்மை மாறாது. தோல் உரிக்கப்படுவதினால், அது திருந்திவிட்டது, மாறி விட்டது என்று நினைத்தால், நாம்தான் ஏமாளியாவோமே தவிர, வேறில்லை.

வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்த பெரியார், கைது செய்யப்படுகிறார். முதல் கட்டமாக அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனைக் காலம் முடிந்ததும், பெரியார் அவர்கள் ஈரோட்டிற்குச் சென்றுவிடுவார் என்று நினைத்தார்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நடக்கின்ற உரிமை பெறும்வரை என்னுடைய போராட்டத்தினைத் தொடருவேன்!
ஆனால், தந்தை பெரியார் அவர்கள், ‘‘இந்தப் போராட்டத்தை இடையில் விட்டுவிட்டு நான் போவதாக இல்லை. இந்தத் தடைகள் நீங்கி, அந்தத் தெருக்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நடக்கின்ற உரிமை பெறும்வரை என்னுடைய போராட்டத்தினைத் தொடருவேன்” என்று சொல்லி, மீண்டும் அந்தப் போராட்டத்தினைத் தொடருகிறார். 74 நாள்களாக அங்கே இருந்து போராடுகிறார்.
மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, நான்கு மாத சிறைத் தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது.
வைக்கம் போராட்டம் என்பது ஒரு சாதாரண நிகழ்வோடு முடிந்துவிடுவதல்ல.

மற்ற போராட்டங்கள், நிகழ்வுகள்!
மற்ற போராட்டங்கள், அறுவடை, விளைச்சல் போன்றவை.
வைக்கம் போராட்டம் – பல போராட்டங்களுக்கு வழிவகுக்ககூடிய ஒன்று!
ஆனால், வைக்கம் போராட்டத்திற்கும், மற்ற போராட்டங்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், வைக்கம் போராட்டம் என்பது விளைச்சல் பண்ணை யிலிருந்து, விதைப் பண்ணையாக வரக்கூடிய, பல போராட்டங்களுக்கு வழிவகுக்ககூடிய ஒன்றாகும்.
அண்ணல் அம்பேத்கர் பெயரை இன்று சொன்னாலே, சில பேருக்கு ஒவ்வாமை வருகிறது.
அம்பேத்கர் அவர்கள் இளைஞராக இருந்தார். அமெரிக்காவிலிருந்து படித்து முடித்து வந்து, ஜாதிக் கொடுமைகளைப் போக்குவது எப்படி? என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு ஒரு செய்தி வருகிறது.
அந்தச் செய்திதான், வைக்கம் போராட்டம்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் எழுதுகிறார்,
‘‘The most important Landmark Event in the Year” என்று.
அந்த ஆண்டில், மிக முக்கியமாக நடந்த ஒரு பெரிய நிகழ்வு.
‘மூக்நாயக்’ என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை. ‘‘பேச முடியாதவர்களுடைய குரல்.” அந்தக் குரலுக்கு ஆசிரியர் யார் என்றால், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்தான்.
அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்கு வைக்கம் போராட்டமே முன்னோடி!
அவர் எழுதுகிறார், வைக்கம் சத்தியாகிரகத்தைப்பற்றி அவர் வரவேற்று சொல்லிவிட்டு, அதுதான் மகத் குளப் போராட்டத்திற்கு ஒரு திருப்பமாக அமைந்தது என்று எழுதினார்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், அதுவரையில், அம்பேத்கரும், பெரியாரும் ஒருவருக்கொருவர் பார்த்தது கிடையாது.
அதுதான் கொள்கை – கொள்கைதான் இணைக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.
தந்தை பெரியாரை கைது செய்து சிறைச்சாலையில் அடைக்கிறார்கள் 1924 ஆம் ஆண்டு.

மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்திருக்கிறது ‘திராவிட மாடல்’ அரசு!
இன்றைக்கு சகோதரிகள் எல்லாம் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்; பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள்; எதிரே நாற்காலிகளில் அமர்ந்தி ருக்கிறார்கள். ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்துகின்ற நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்கள் கேட்காமலேயே அவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்திருக்கிறார். ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள்; பெண்கள் எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள். ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற காட்சி, இதுபோன்ற நிலை உண்டா? அதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வெற்றி! அதுதான் பெரியாரியத்தினுடைய வெற்றியாகும். இது எங்கே தொடங்கியது?

அன்னை நாகம்மையார் – கண்ணம்மையார்!
வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தவுடன், அன்னை நாகம்மையார் அவர்கள், பெரியாருடைய தங்கை கண்ணம்மையார் மற்றும் பெண்களைத் திரட்டி, ஈரோட்டிலிருந்து கேரளாவிற்குச் செல்கிறார்கள், வைக்கம் போராட்டத்தினைத் தொடருவதற்காக.
இன்று சில பைத்தியக்காரர்கள் உளறிக் கொண்டி ருக்கிறார்கள், ‘‘குடும்ப அரசியல், குடும்ப அரசியல்” என்று. பெரியாருடைய குடும்பம்தானே வைக்கத்திற்குச் சென்று மனித உரிமையைக் காப்பாற்றியது. அதேபோன்றதுதான் கலைஞர் குடும்பமும், அதே போன்றதுதான் அண்ணாவின் குடும்பம். இது சொத்து வாரிசு அல்ல நண்பர்களே, கொள்கை வாரிசுகள் என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்!
பதவி என்றவுடன் வாய் திறக்கவில்லை; போராட்டம் என்றால், அங்கே சென்று போராடுவது.

நெருக்கடி காலத்தில் மிசா சட்டத்தில் சிறைச்சாலையில் இருந்தோம்!
அதனால்தான், 1976 ஆம் ஆண்டு நெருக்கடி காலகட்டத்தின்போது, இன்றைய முதலமைச்சர், அன்றைக்கு தி.மு.க. இளைஞரணியில் இருந்தார். திருமணமாகி ஒரே மாதம்தான் ஆகியிருந்தது. அப்போது அவர் மிசா சட்டத்லீல் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாகவே, எங்களைப் போன்றவர்கள் மிசா சட்டத்தில் சிறைச்சாலையில் இருந்தோம்.
‘‘அண்ணே, நான் ஸ்டாலின்’’ என்றார்
எங்களையெல்லாம் ரத்தம் சிந்த, சிந்த அடித்தார்கள். இரவு 11 மணிக்கு நாங்கள் இருந்த சிறை அறையில், ஒருவர் வந்து எங்கள் மேல் விழுந்தார் ரத்தம் சொட்டச் சொட்ட. அவர் யாரென்று தெரியவில்லை இருட்டில். அவரைத் தூக்கி நிறுத்தினோம்; ‘‘அண்ணே, நான் ஸ்டாலின்” என்றார் அந்த இளைஞர்.
(தொடரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *