ஜாதியா? தீண்டாமையா? நெருங்காமையா? பாராமையா? தொடாமையா? எல்லா ஆமைகளையும் அடித்து விரட்டக்கூடிய பெரியாருடைய கைத்தடி இன்னமும் இருக்கிறது!
‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தும் நம்முடைய முதலமைச்சரின் கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கிறது!
அந்தக் கைத்தடி, யாரையும் தாக்காது; இந்த இயக்கத்தைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும்!
கோவை, டிச.28 ஜாதியா? தீண்டாமையா? நெருங்கா மையா? பாராமையா? தொடாமையா? எல்லா ஆமைகளையும் அடித்து விரட்டக்கூடிய பெரியாருடைய கைத்தடி இன்னமும் இருக்கிறது. அந்தக் கைத்தடி, யாருடைய கைகளில் சேரவேண்டுமோ, அவருடைய கைகளில், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கைத்தடி, யாரையும் தாக்காது. அதேநேரத்தில், இந்த இயக்கத்தைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள்
கடந்த 26.12.2024 அன்று மாலை கோவையில் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்” – தமிழ்நாடு,கேரள மாநில முதல மைச்சர்களுக்கு நன்றி – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது நமது இயக்கம்!
எப்போதும் போல் மிகுந்த எழுச்சியோடு, இயற்கையோடு போட்டிப் போட்டுக் கொண்டு நடைபெறக்கூடியதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் வீறுகொண்ட இயக்கமாக இருக்குமா? தளர்ந்துபோன ஓர் இயக்கமாகுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கக் கூடிய வகையில், சிறப்பான பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது இந்த இயக்கம். தந்தை பெரியார் அவர்கள், சென்னை தியாகராயர் நகரில் இறுதியாக உரையாற்றிய போது என்ன முழக்கத்தைச் சொன்னார்களோ, அதை கிட்டத்தட்ட ஓர் அரை நூற்றாண்டுக்குப் பிறகும் நினைவூட்டி, நிலை நாட்டிக் கொண்டுள்ளோம். ‘திராவிட மாடல்’ அரசு இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கக் கூடிய மிகப்பெரிய ஓர் எழுச்சி இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, எந்த அரசு, கேரளப் பகுதியினுடைய திருவிதாங்கூர் அரசு தந்தை பெரியாரைக் கைது செய்து, அன்னை நாகம்மையாரைக் கைது செய்து – பெரியாருடைய அந்தப் போராட்டத்தை கைதுகளால் மட்டுமே நிறுத்த முடியாது என்று கருதியவுடன், ஸநாதனத்தையும், வைதீகத்தையும் நம்பிய ஒரு நிலையில், பெரியாரின் ஆயுளை முடிக்கவேண்டும் என்பதற்காக, ‘சத்ரு சங்கார யாகத்தை’ நடத்தினார்கள். ஆனால், அதில் தோற்றுப்போன ஆரியம், மீண்டும் இப்போது படமெடுத்தாடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாகத்தான், இப்போது எங்களைப் போன்ற, அதற்குப் பதிலளிக்கக் கூடிய எழுச்சித் தமிழரைப் போன்ற, இன்னும் இங்கே இருக்கக்கூடிய உணர்ச்சியுள்ள இளைஞர்களைப் போன்ற பலர் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக, ஒரு பக்கம் கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும்
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்!”
என்ற குறளுக்கேற்ப கடமையாற்றுவதற்கு எங்க ளுக்குப் பருவம் முக்கியமல்ல என்பதற்கொப்ப இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
பெரியாருடைய கைத்தடி இன்னமும் இருக்கிறது!
ஜாதியா? தீண்டாமையா? நெருங்காமையா? பாராமையா? தொடாமையா? எல்லா ஆமை களையும் அடித்து விரட்டக்கூடிய பெரியாருடைய கைத்தடி இன்னமும் இருக்கிறது.
அந்தக் கைத்தடி, யாருடைய கைகளில் சேரவேண்டுமோ, அவருடைய கைகளில், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தும் நம்மு டைய முதலமைச்சர் அவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்தக் கைத்தடி, யாரையும் தாக்காது. அதேநேரத்தில், இந்த இயக்கத்தைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும்.
எங்களுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க வந்திருக்கின்றார்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பாக செய்து முடித்த இரு மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்நிகழ்ச்சிக்கு, அருமைச் சகோதரர் எங்கள் எழுச்சித் தமிழர் எங்களுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க வந்திருக்கின்றார்.
அப்படிப்பட்ட எழுச்சித் தமிழர் அவர்களே,
இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கக்கூடிய கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் பிரபாகரன் அவர்களே,
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாக உரையாற்றி விடை பெற்றுச் சென்றுள்ள பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஈசுவரசாமி அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோவை மாவட்டச் செயலாளர் ரவி அவர்களே, கோவை மாநக ராட்சியின் மேயர் திரு.வெற்றிச்செல்வன்
அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்களே,
அன்போடும், உறவோடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்!
நேரத்தின் நெருக்கடியினாலும், மழையின் அச்சுறுத்தலாலும், ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியே விளிக்கவேண்டும்; அனைத்துக் கட்சித் தலைவர்களின் பெயரையும் சொல்லவேண்டும் என்ற விருப்பமும், விழைவும் இருந்தாலும்கூட, அவர்களை அழைத்ததாகக் கருதிக்கொள்ளவேண்டும் என்று அன்போடும், உறவோடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை!
இந்தக் கூட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகும். மிகச் சுருக்கமாக உங்க ளுக்குச் சொல்லவேண்டுமானால், தந்தை பெரியார் தமது இறுதிப் பேருரையை டிசம்பர் 19 ஆம் தேதியன்று, சென்னை தியாகராயர் நகரில் நிகழ்த்தினார்.
அன்று அய்யா அவர்கள் வேனில் இருந்தபடியே உரையாற்றினார்.
இன்றைய இளைஞர்களுக்கு வரலாறு சொல்லிக் கொடுக்கப்படவேண்டும். இன்றைக்கு சாலைகளில் உள்ள பாலங்களில் வேக வேகமாக வருகின்றோம். கோவையில்கூட அந்தப் பகுதியில் இருந்து இந்தப் பகுதிக்கு, இந்தப் பகுதியிலிருந்து அந்தப் பகுதிக்குப் போகவேண்டும் என்றால், எவ்வளவு நெருக்கடி இருக்கும் முன்பு. ஆனால், காலையில் வரும்பொழுது, மிக எளிதாக வந்துவிட்டோம்.
இன்றைக்குச் சாலையில் காரில் பயணிக்கின்ற வர்களுக்கு முன்பு இருந்த நிலை என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
புரட்சிக்கவிஞர் ஒரு சோலைக்குப் போகிறார். சாதாரணமாக கவிஞர்கள் என்ன சொல்வார்கள்?
சோலை இப்படி இருந்தது; காற்று அப்படி வீசியது; தென்றல் இப்படி வந்தது. காதலர்கள் அங்கே போனார்கள் என்றெல்லாம் கவிதையில் பேசுவார்கள்.
ஆனால், அவர் புரட்சிக்கவிஞர் அல்லவா, அவர் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே – முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே.!”
என்று கேட்டார்.
அதைச் செம்மைப்படுத்துவதற்கு, எத்தனைத் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருப்பார்கள். அவர்க ளுடைய ரத்தத்தின்மீதுதான் அந்தப் பூங்கா அமைந்தி ருக்கிறது.
திராவிட இயக்கம் என்ற அந்த உணர்வு!
அதுபோல நண்பர்களே, இன்றைய இளைஞர்களே, உங்கள் படிப்பு, உங்களுடைய பதவிகள், உங்களுடைய சமத்துவம் அத்தனையும் பெரியார் என்ற வைக்கம் வீரர் – திராவிட இயக்கம் என்ற அந்த உணர்வு – ‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று சொல்லக்கூடிய உணர்வு – இவை அத்தனையும் சேர்ந்துதான் நம்மை மனிதனாக்கி இருக்கிறது.
அதற்கு முன்பு, விலங்குகளுக்குக் காட்டப்பட்ட மரியாதைகூட, ஆறறிவு படைத்த மனிதர்களுக்குக் காட்டப்படவில்லை.
அந்த அளவிற்குக் கொடுமை இந்த சமுதாயத்தில் இருந்தது. அதைத்தான் நம் அருமைத் தமிழர், எழுச்சித் தமிழர் சற்று நேரத்திற்கு முன்பு சிறப்பாக விளக்கினார்.
வரலாற்றுப் பார்வை வேண்டும்!
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நண்பர்களே நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இளை ஞர்களே, தோழர்களே! உங்களுக்கு வரலாற்றுப் பார்வை வேண்டும்.
அப்போது பெரியார் அனுமதி கேட்டு, காந்தியாருக்குக் கடிதம் எழுதுகிறார்.
காந்தியாரிடம் அனுமதி கேட்கும்
தந்தை பெரியார்!
பெரியார், வைக்கம் சென்று போராடவேண்டிய நிலையில், காந்தியாரிடம் அனுமதி கேட்கிறார்.
காந்தியார் தயங்குகிறார்.
பெரியாருக்குத் தலைவர் காந்தி.
காந்தியார் கிழித்த கோட்டை, பெரியார் அப்பொழுது மீறமாட்டார். அப்படிப்பட்ட ஒரு தொண்டர் அவர்.
உங்களுடைய மாநிலத்திலிருந்து, கேரளாவிற்கு ஏன் செல்கிறீர்கள்? என்று காந்தியார் கேள்வி கேட்கிறார்.
வைக்கத்தில் ஏற்கெனவே போராடியவர்களை யெல்லாம் அந்த அரசு, கைது செய்து சிறைச்சாலையில் அடைத்துவிட்டார்கள்.
வைக்கம் போராட்டம் மதத்திற்கு எதிரானதல்ல; மனித உரிமைக்கான போராட்டம்!
பத்திரிகையாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமானால், ‘‘போராட்டம் பிசுபிசுத்தது” என்றுதான் சொல்லவேண்டும்.
வைக்கம் போராட்டம் என்பது மதத்திற்கு எதிரான தல்ல; மனித உரிமைக்கான போராட்டம் அது.
அந்தப் போராட்டம் அத்தோடு முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அன்றைக்கு இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு சிறைச்சாலையிலிருந்து ஒரு கடிதம் வருகிறது,
அன்றைக்குப் பெரியார், இராமசாமி நாயக்கர் என்றுதான் அழைக்கப்பட்டார்.
அவர் உடனடியாக அந்தக் கடிதத்தைப் படிக்கிறார்.
‘‘எங்களையெல்லாம் கைது செய்துவிட்டார்கள்; நீங்கள் தலைமையேற்று இந்தப் போராட்டத்தைத் தொடரவில்லையானால், இந்த இயக்கம் தோல்வியடைந்து விடும். ஆகவே, நீங்கள் இங்கே வந்து இந்தப் போராட்டத்தைத் தொடரவேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது.
அதைப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள், உடனடியாக வைக்கத்திற்குப் புறப்படுகிறார். அங்கே அவருக்கு அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தார் வருகிறார்கள்.
திருவிதாங்கூர் அரசு மரியாதையை நிராகரித்த பெரியார்!
ஆனால், தந்தை பெரியார் அவர்கள், ‘‘நான் இங்கே அரண்மனையைக் காணவேண்டும் என்பதற்காக வரவில்லை. போராட்டத்தைத் தலைமையேற்ற நடத்த வந்திருக்கிறேன். ஆகவே, அரசு மரியாதை தேவையில்லை” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.
ஏனென்றால், திருவிதாங்கூர் ராஜா அவர்கள், டில்லிக்குச் செல்லவேண்டும் என்றால், ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் இல்லத்தில்தான் தங்குவார். அந்த நட்பின் காரணமாக, தந்தை பெரியாருக்கு ராஜ மரியாதை கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.
அரசரை விரோதியாக்கிக் கொள்வதா என்று பெரியார் நினைக்கவில்லை. இவர்தாம் பெரியார் – அவர்தாம் பெரியார்!
கொள்கையா? நட்பா?
கொள்கையே வெற்றி பெறவேண்டும்.
இதுதான் பெரியார்!
முதல் பாடம் – அதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்.
அப்படி நடத்திய அந்தப் போராட்டத்திற்குத்தான் அனுமதி கேட்கிறார், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காந்தியாரிடம்.
தலைமையை மீறக்கூடாது; சத்தியாகிரகத்தையும் நடத்தவேண்டும்!
ஆனால், காந்தியார், ‘‘நீ இன்னொரு மாநிலத்துக்காரன்; வைக்கத்திற்குச் சென்று ரகளை செய்தால், என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்கிறார்.
காந்தியாருக்கும் அடிபணிய வேண்டும்; ஏனென்றால், தலைமையை மீறக்கூடாது, கட்டுப்பாடு. ஆனால், அதேநேரத்தில், சத்தியாகிரகத்தையும் நடத்தவேண்டும்; தோழர்களையும், இந்த இயக்கத்தையும் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் நினைத்த நேரத்தில், அவர் ஒரு கடிதம் எழுதுகிறார்.
இளைஞர்களே, தோழர்களே, வரலாற்றைப் படியுங்கள் – இது உங்கள் பாட புத்தகங்களில் இருக்காது. ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பாடப் புத்தகத்தில் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, பழைமை, பாசிச, வருணாசிரம வாரிசுகளின் ஆட்சிகளில் இருக்காது.
பெரியார், காந்தியாருக்கு எழுதிய கடிதம் மிக முக்கியமானது.
‘‘என்னுடைய மதிப்பிற்குரிய தலைவர் மகாத்மா அவர்களே,
தெருக்களில் நடப்பதற்குத்தான் வைக்கம் போராட்டம் நடைபெறுகிறது!
நீங்கள் எனக்குத் தடை உத்தரவு போடுவது போன்று சொல்லியிருக்கின்றீர்கள். வைக்கத்தில் வந்து நான் பார்த்தேன், தெருக்களில் நடப்ப தற்குத்தான் அந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.
வைக்கத்தப்பன் கோவிலைச் சுற்றியுள்ள மூன்று தெருக்களில், ஒரு தெருவில் நீதிமன்றம் அமைந்தி ருக்கிறது. மாதவன் என்பவர், கீழ்ஜாதி என்று சொல்லப்பட்ட ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு வழக்குரைஞர். (தொடரும்)