வி.சி.வில்வம்
வேலூர், சத்துவாச்சாரி கனகாம்பாள்
திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு என்கிற வரிசையில் பலரையும் சந்தித்து வருகிறோம். முழுக்க, முழுக்க மகளிர் கூறும் செய்திகளை மட்டுமே இங்கு பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் ஒருவரை நேர்காணல் செய்ய 3 மணி நேரம் ஆகிறது. குறைந்தது 10 பக்கத்திற்குக் குறிப்பு எடுத்தால்தான், விடுதலை ஞாயிறு மலரில் ஒரு பக்கச் செய்தி கிடைக்கும்.
இதுவரை எடுத்த அத்தனைப் பேரும் அந்தளவு செய்திகளைக் கூறியுள்ளனர். இது மகளிர் வரலாற்றைப் பதிவு செய்யும் பெரும் வாய்ப்பு! ஆண்கள் தங்களின் பங்களிப்பை, அனுபவங்களைப் பலரிடம் கூறும் வாய்ப்பு அதிகம். அதை அவர்களே ஏற்படுத்தியும் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி அமைவதில்லை!
ஞாயிறு மலரில் வரும்
“அம்மாக்களின்” நேர்காணலைப் பார்த்து, அவர்களின் பிள்ளைகளே வியப்படைவதாகச் சொல்கிறார்கள். “உங்களிடம் இவ்வளவு திறமைகள் இருக்கிறதா? இவ்வளவு வரலாறு இருக்கிறதா?”, எனக் கேட்பதாகக் கூறுகின்றனர். காரணம் பெரும்பாலான அம்மாக்கள் இதைப் பகிர்ந்து கொள்வதில்லை.
இயக்க வேலைகளை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது நேர்காணல் வாய்ப்புக் கிடைத்ததும் மனம் திறக்கிறார்கள், அவ்வளவு தான்!
இப்படியான சூழலில் ஒரு சில மகளிர் வயது மூப்பு, உடல்நிலைக் காரணங்களால் நினைவுகளை இழந்துள்ளார்கள். எனினும் இயக்கத்தில் அவர்களின் பங்களிப்பைப் பதிவு செய்வது அவசியம் என்கிற அடிப்படையில், கிடைக்கும் சில செய்திகளைச் சேகரிக்க வேண்டியுள்ளது! அந்த வகையில் இந்த வாரம் வேலூர், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள இயக்க மகளிர் கனகாம்பாள் அவர்களை வீட்டில் சந்தித்தோம்.
அம்மா வணக்கம்!
உடல்நலம் எப்படி இருக்கிறது?
ஓரளவு பரவாயில்லை! வயது 79 ஆகிறது. முன்பு போல இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த வருத்தம் இருக்கிறது. சிறு வயது முதலே நான் இயக்கத்தில் இருக்கிறேன். எனது பெற்றோர் குப்பம்மாள் – கிருஷ்ணசாமி. அப்பா பெரியார் கொள்கையில் இருந்ததால், நானும் அவ்வழியே வந்துவிட்டேன்.
மகிழ்ச்சி! சிறு வயது முதலே
நீங்கள் கூட்டங்களுக்குச்
செல்லத் தொடங்கிவிட்டீர்களா?
ஆமாம்! 12 வயதிலேயே கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டேன். குறிப்பாகக் கோலாட்டம் கற்றுக் கொண்டேன். நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்னால், சாமி சமாரன் என்பவர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடுவார். அதற்கு ஏற்றவாறு நாங்கள் கோலாட்டம் அடிப்போம். ஒரு மணி நேரம் கூட இது நடைபெறும்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு நாடகம் நடக்கும். அதில் தோழர்கள் பலரும் நடிப்பார்கள். எனக்கு 3 சகோதரர்கள். மூவருமே அதில் பங்கேற்பார்கள். ஒருவர் அரசர் வேடம், மற்றொருவர் பார்ப்பனர் வேடம் என மாறி, மாறி நடிப்பார்கள். அந்தக் காலத்தில் சத்துவாச்சாரியில் எங்கும் நமது தோழர்கள்தான் நிறைந்திருப்பார்கள்.
இன்னும் சொன்னால் சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய காலத்தில் இருந்தே இங்கு தோழர்கள் செயல்படத் தொடங்கிவிட்டனர். சத்துவாச்சாரி பகுதியையும் நூற்றாண்டு கண்ட சுயமரியாதை ஊராக இதையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்குக் குடியாத்தம் பகுதி சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு அடிப்படை சத்துவாச்சாரி என்றே சொல்லலாம்.
தங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
1961இல் எங்களுக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. தெருவில் பந்தல் அமைத்து, மாநாடு போல நடந்தது. ஆனால் உறவினர்கள் பலரும் வர மறுத்துவிட்டனர். மண்டபத்தில் நடத்தினாலே யோசிப்பார்கள். இதுவோ தெருவில் பொதுக் கூட்டம் போல நடந்தது.
செய்யாறு தாடி அருணாசலம், ஆம்பூர் பெருமாள், வேலூர் திருநாவுக்கரசு ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். எனது இணையர் பெயர் இரா.கணேசன். அவரும் பெரியார் கொள்கையில் இருப்பவர்.
அதுமட்டுமின்றி எங்கள் பெற்றோரும், இணையரின் பெற்றோருமே இந்த இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் தான்! அதுவும் நீதிக்கட்சி காலத்தில் இருந்தே பணியாற்றியவர்கள். அந்த வகையில் எங்கள் குடும்பம் 4 ஆவது தலைமுறையாக இருந்து வருகிறது.
இயக்க நிகழ்வுகளில் பங்கேற்ற
நினைவுகளைக் கூறுங்கள்?
1981ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற மனுதர்ம எரிப்பில் பங்கேற்று 15 நாள் சிறை சென்றேன். நான், சகுந்தலா, நாகம்மா, ஜோலார்பேட்டை சரோஜா, கே.கே.சின்னராசு அவர்களின் இணையர், அழகிரி அவர்களின் இணையர் உள்ளிட்ட பலரும் சிறைக்குச் சென்றோம். மொத்தம் 13 பெண்கள் சென்றதாக நினைவு. அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திலும் கலந்துள்ளேன்.
3 முறைக்கு மேல் சிறை சென்றுள்ளேன். பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு டில்லி சென்றேன். அந்தக் காலத்தில் இயக்கத் தோழர்களுக்கு, நம் வீட்டில் இருந்துதான் உணவு செய்து அனுப்புவோம். அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கும். 2012 ஆம் ஆண்டு திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடு வேலூரில் நடைபெற்றது. அப்போது “இயக்க வீராங்கனை” என்கிற சான்றிதழை நமது ஆசிரியர் வழங்கினார்கள். இயக்க நிகழ்வுகளில் கொடி ஏற்றிய அனுபவமும் உண்டு.
உங்கள் இணையர் என்ன செய்கிறார்?
அவரும் கொள்கையில் தீவிரமாக இயங்கியவர். தையல் கடை நடத்தி வந்தார். சத்துவாச்சாரி பகுதியின் இயக்க அலுவலகமாகவும் அதுவே இருந்தது. எங்களுக்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் திருமணத்தை ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்கள். எனது இணையர் சிலம்பம் கற்றுக் கொடுப்பார். சத்துவாச்சாரியில் “அழகிரி சிலம்பக் கூடம்” என்கிற பயிற்சிப் பள்ளியை நடத்தினார். அதில் கோள், சுருள், மான்கொம்பு உள்ளிட்ட பலவிதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதில் நமது தோழர்கள் மட்டுமே 60 பேர்வரை பயிற்சி எடுத்தனர்.
தமிழ்நாடு முழுவதிலும் மாநாடுகள், மூடநம்பிக்கை ஊர்வலங்களில் இந்த வீர விளையாட்டுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக “கெக்கிலி கட்டை ஆட்டம்” என்பது பிரபலமாகப் பேசப்பட்டது. காலில் கட்டப்பட்ட அந்தக் கட்டை 6 அடி உயரம் இருக்கும். அதில் ஏறி நின்று ஆடுவர்.
தந்தை பெரியாரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட
நினைவுகள் இருக்கிறதா?
நன்றாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து, எங்கள் ஊருக்கு 4 முறை தந்தை பெரியார் வந்துள்ளார். வரும்போதெல்லாம் வண்டியில் அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து வருவோம். அந்த ஊர்வலத்தின் முன் சிலம்பு வீச்சும், கோலாட்டமும் நடைபெறும். சத்துவாச்சாரி பகுதியில் மட்டுமே தந்தை பெரியார் 7 பேருக்குச் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்துள்ளதாகக் கூறுவார்கள்.
உறவினரான எங்கள் அண்ணன் ஒருவர், தந்தை பெரியார் மூலமே திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால் தேதி அமையவில்லை. ஓரிரு ஆண்டுகள் கழித்து தந்தை பெரியாரிடம் தேதி வாங்கி, பிறகே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.
வேலூர் மேயராக இருந்த ம.ப.சாரதி அவர்களின் படத்திறப்பில் தந்தை பெரியார் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய பேச்சுதான், பின்னாளில் “மனித வாழ்வின் பெருமை எது?” என்கிற புத்தகமாக வந்தது!
“தந்தை பெரியாரைப் போலவே ஆசிரியர் அவர்களும் பலமுறை சத்துவாச்சாரி வந்துள்ளார்கள். குறிப்பாக எங்கள் வீட்டிற்கும் வந்துள்ளார்கள். உணவு சமைத்துக் கொடுத்த பெருமையும் எனக்கு உண்டு. புதிதாக நாங்கள் திறந்த இனிப்புக் கடைக்கும் ஆசிரியர் வந்துள்ளார்கள்.
அந்த வருகையின் போது சத்துவாச்சாரியில் தோழர்கள் தீப்பந்த வரவேற்பு கொடுத்தார்கள்”, என நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, யோசித்து, யோசித்துப் பேசினார் அம்மா கனகாம்மாள் அவர்கள்!