நாகையில் இ.எம்.ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு
“இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா தெரு” என பெயர் சூட்டல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னை, டிச. 24 –‘‘இசை முரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியில் அவர் இல்லம் அமைந் துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா தெரு” என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்கா “இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயர் சூட்டவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
நாகூர் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெருவிற்கும், புதுப் பிக்கப்பட்ட பூங்காவிற்கும் அவரது பெயர் சூட்டி சிறப்பு செய்ததற்கு நாகூர் ஹனிபாவின் குடும்பத்தினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நாகூர் ஹனிபா என்று அனை வராலும் அன்போடு அழைக்கப்படும் இஸ்மாயில் முகமது ஹனிபா, 1925ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினத்தில் முகமது இஸ்மாயில் – – மரியம் பீவி இணையருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவரது தந்தை முகமது இஸ்மாயில் நாகூரை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் முகமது ஹனிபா அவர்கள் நாகூர் இ.எம். ஹனிபா என்று அழைக்கப்பட்டார். இளம் வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் ஆவார்.