சென்னை, டிச.21- “தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ரவி ஜன., 6ஆம் தேதி உரையாற்ற உள்ளார். சட்டப் பேரவையில் உரையை வாசிக்க மட்டுமே, அவருக்கு உரிமை உண்டு; சொந்தக் கருத்தைக்கூற, உரிமை இல்லை,” என, அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சட்டப் பேரவைக் கூட்டம்
“இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தை, ஜனவரி 6ஆம் தேதி, ஆளுநர் கூட்டி உள்ளார். அன்று காலை காலை 9:30 மணிக்கு, ஆளுநர் ரவி உரை நிகழ்த்த உள்ளார்.
சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டப் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக. முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தால், விவாதம் செய்து நிறைவேற்ற, சட்டப் பேரவை தயாராக உள்ளது. கடந்த முறை ஆளுநர், தனது உரையின் முதல் மற்றும் கடைசி பக்கத்தை வாசித்தார். இந்த முறை முழு உரை வாசிப்பார் என நம்புகிறோம். கடந்த 2011 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத் தொடர், இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக, கூட்டம் குறைவான நாட்கள் நடத்தப்பட்டன.
வெள்ளம் போன்ற பாதிப்புகள் வரும்போது, அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், சட்டப் பேரவைக் கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த இயலவில்லை. சூழலுக்கு தகுந்தபடி சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப்படும். ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பது எண்ணம். மதுரை, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச, தேவையான நேரம் கொடுத்தோம். அரசு எதிர்க்கட்சியை மதிக்கிறது; பேச அனுமதி அளிக்கிறது. சட்டப் பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை.
சட்டப் பேரவையில், ஆளுநர் உரை நிகழ்த்த மட்டும் அனுமதி உள்ளது; கருத்து கூற அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 234 சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே, கருத்து கூற அனுமதி உண்டு.
நாடாளுமன்றத்தில் அமைச்சரவை கூடி, எழுதி கொடுக்கும் உரையை, குடியரசுத் தலைவர் முழுமையாக வாசிக்கிறார். அதன்படி சட்டப் பேரவையில், முதலமைச்சர், அமைச்சரவை எழுதி கொடுக்கும் உரையை, ஆளுநர் வாசிக்க வேண்டும். அதை வாசிக்கும் உரிமை மட்டும், அவருக்கு உண்டு; சொந்தக் கருத்தை கூற, அவருக்கு உரிமை இல்லை. சட்டப் பேரவைக்கு வரும் ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்கப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.