ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதியுடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன். (கையெழுத்துப் பிரதி)
நான் ஒரு சுதந்திர மனிதன், எனக்குச் சுதந்திர நினைப்பு சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது. (‘புரட்சி’, 17.12.1933)
நான் அரசியல், மதத்துறையின் பேரால் அயோக்கிய மூட, சுய நல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப்பட்டவன்; நஷ்டப்பட்டவன்; மானத்தையும் பறி கொடுத்தவன்; கிடைக்க இருந்த மந்திரி பதவியை உதறித்தள்ளியவன். ஆனதால் எனக்கு இந்த இழி வாழ்வு (சுதந்திர இந்திய வாழ்வு) வெறுப்பாகத் தோன்றுகிறது. (‘விடுதலை’, 14.11.1967)
நான் பதவி வேட்டை உணர்ச்சிக்காரனல்ல; சமுதாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன். நாளைக்கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதையும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக்கிறேன். (‘விடுதலை’, 02.05.1968)
நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல; பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பு அல்ல. இதுதான் எனது நிலை. (‘குடிஅரசு’, 25.03.1944)
நான் கூறுவதை அருள் கூர்ந்து பொறுமையாகக் கேளுங்கள் என்றுதான் கூறுகின்றேன். அப்படியே நம்புங்கள் என்று கூற வரவில்லை. நானும் மனிதன். நீங்களும் மனிதர். நான் சொல்வதை அப்படியே நம்பினால் உங்கள் புத்திக்குத்தான் என்ன மரியாதை? நமது நாடு நாசமாகப் போனதற்கே காரணம், கண்டவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கேட்டுத்தான் ஆகும். (‘விடுதலை’, 03.07.1965)
நான் பகுத்தறிவுவாதி. எந்த விசயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன். நான் பஞ்சேந்திரியங்களுக்குத் தெரியப்படும் விசயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்களுக்குப் புலப்படாத எதையும் நம்பவில்லை. (‘விடுதலை’, 03.10.1967)
நான் ஒன்று சொல்லுகிறேன்… உங்களிடம் புகழ் வாங்க நான் கஷ்டப்பட வேண்டும். ஆனால் பார்ப்பானிடம் புகழ் வாங்குவது என்றால் வெகு சுலபம். “சாமி உண்டு” என்று சொன்னால் போதுமே!’ பகவான் இராமசாமி’, ‘மகான் இராமசாமி’, ‘மகாத்மா இராமசாமி’ என்று சொல்லியிருப்பானே! (‘விடுதலை’, 18.09.1972)
நான் ஒரு நாத்திகனல்ல; தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியுமல்ல; தேசாபிமானியுமல்ல; ஆனால் தீவிர (மனித நேயம்) ஜீவரச எண்ணமுடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். (‘குடிஅரசு’, 30.10.1932)
நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் அறிகுறியாக அரசியல் சட்டத்தை கொளுத்தினேன்.(‘விடுதலை’, 21.11.1957)
நான் ஒரு மனித தர்மவாதி என்பதும், எதையும் திரைமறைவு இல்லாமல் திகம்பரமாய்க் கண்டே கருத்துக் கொள்கிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள். (‘விடுதலை’, 06.03.1962)
நான் சொன்னதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆய்விடுவீர்கள் என்ற வேதம் சாத்திரம் புராணம் போல நான் உங்களை அடக்கு முறைக்குள் ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இதுகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். (‘குடிஅரசு’, 11.09.1927)